டுபாயில் இருந்து காவல்துறையை மிரட்டும் பாதாள உலக குழு
பாதாள உலகக் கும்பல்களுக்கு எதிரான போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வரும் காவல்துறை விசேட அதிரடிப்படை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு டுபாய் நாட்டில் மறைந்திருக்கும் பாதாள உலக தலைவர்களிடமிருந்து தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதாள உலகக் குழுக்களை ஒடுக்கும் காவல்துறை விசேட அதிரடிப்படை தலைமையிலான செயற்பாடுகளை நிறுத்துமாறு இந்த பாதாள உலகத் தலைவர்கள் அச்சுறுத்தல்களை விடுத்து வருவதாகவும் அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.
காவல்துறை அதிகாரி சுட்டுக்கொலை
தென்னிலங்கையில் பாதாள உலகத்தை ஒடுக்குவதில் அளப்பரிய சேவையாற்றிய அம்பலாங்கொடை காவல்துறை குற்றப் பிரிவின் முன்னாள் நிலையத் தளபதி பாலேந்திரசிங்கவும் பாதாள உலக குழுவால் தொடர்ச்சியாக மரண அச்சுறுத்தலுக்கு உள்ளான அதிகாரி என தெரிவிக்கப்படுகிறது.
பாதாள உலகக் குழுக்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் காவல்துறை உத்தியோகத்தர்களை பயமுறுத்தி அவர்களை செயலிழக்கச் செய்வதற்காகவே இந்த அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
தென்னிலங்கையில் அதிகரித்த பாதாள உலக குழுவின் செயற்பாடுகள்
நாட்டின் பாதாள உலகத்தை செயற்படுத்தும் பாதாள உலக தலைவர்கள் உட்பட 50 குற்றவாளிகள் தற்போது துபாய் நாட்டில் பாதுகாப்பாக தங்கியுள்ளனர்.
இது தொடர்பில் தாம் மேற்கொண்ட விசாரணையில், தென்னிலங்கையில் பாதாள உலகம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாக உயர் காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
காவல்துறை உத்தியோகத்தர்களைக்கூட சுட்டுக் கொல்லும் அளவுக்கு பாதாள உலகக் குண்டர்கள் பலமாகிவிட்டதாகவும், இதனைக் கட்டுப்படுத்தாவிடின் எதிர்காலத்தில் பாதாள உலகக் குண்டர்கள் காவல் நிலையங்களுக்குள் புகுந்து காவல்துறை உத்தியோகத்தர்களைக் கொல்லவும் வாய்ப்புகள் இருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.