வெளிச்சத்திற்கு வந்த தகவல்-நாடாளுமன்றில் பெரும் நெருக்கடிக்குள் சிக்கவுள்ள பொறிஸ் ஜோன்சன்!
பிரித்தானியப் பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் விருந்துபசாரங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மேலதிக கேள்விகளை பிரதமர் பொறிஸ் ஜோன்சனிடம் முன்வைக்கவுள்ளனர்.
இந்த விருந்துபசாரம் தொடர்பிலான சூ கிரேயின் விசாரணை நிறைவடைந்து, அவரின் அறிக்கை இன்று வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மீதான அழுத்தங்கள் அதிகரித்துள்ளன.
இந்த விருந்துபசாரங்கள் தொடர்பில் பெருநகர காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், சூ கிறேயின் விசாரணை அறிக்கை வெளியாகவுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
பிரித்தானிய பிரதமர் அலுவலகம் மற்றும் வைட் ஹோல் ஆகியவற்றில் 2020 ஆம் ஆண்டில் இருந்து கொவிட்-19 விதிமுறைகளின் சாத்தியமான மீறல்கள் குறித்து காவல்துறையினர் ஆராய்ந்து வருவதாக காவல்துறை ஆணையாளர் கிறசிடா டீக் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதை பிரதமர் பொறிஸ் ஜோன்சன் வரவேற்றுள்ளார். குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு தேவையான தெளிவை வழங்கும் வகையில் இந்த விசாரணைகள் அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை பிரதமர் அலுவலகத்தில் கொரோனா தொற்று வழிகாட்டல் நெறிமுறைகள் மீறப்படவில்லை என பொறிஸ் ஜோன்சனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற விருந்துபசாரங்கள் தொடர்பில் அரச அதிகாரியான சூ கிறே தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையிலேயே பெரு நகர காவல்துறையினர் பிரதமர் அலுவலக விருந்துபசாரங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதனிடையே சூ கிறே தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரதி பெரும்பாலும் இன்று பிரதமர் அலுவலகத்திடம் கையளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கை கிடைக்கப் பெற்ற பின்னர், பிரதமர் பொறிஸ் ஜோன்சன் அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நாடாளுமன்றத்தில் இன்று பிரதமர் பொறிஸ் ஜோன்சன், நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருந்துபசாரங்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய நெருக்கடியையும் எதிர்நோக்கியுள்ளார்.
சமூக ஒன்று கூடல்களுக்கு தடைவிதிக்கப்பட்டிருந்த காலப் பகுதியில் பிரதமர் அலுவலகத்தில் விருந்துபாசாரம் நடத்தியமை தொடர்பான சர்ச்சை அடங்குவதற்குள் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் பிறந்தநாள் ஒன்றுகூடல் தொடர்பான தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
