புலம்பெயர் நாடுகளில் தனித்துவ இடம்பிடித்துள்ள தமிழ்ச்சோலை - வெளியானது அஞ்சல்தலை!
புலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழிக்காக பணியாற்றிவரும் அமைப்புகளில் பிரான்சில் இயங்கிவரும் தமிழ்சோலைக்கு என ஒரு தனித்துவஇடமுள்ளது. அந்தவகையில் அந்த அமைப்பு தனது தலைமைப்பணியகத்தின் 25 ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரான்ஸ் அஞ்சல்துறையுடன் இணைந்து முத்திரைகளை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் சிறிலங்கா அரசாங்கத்தால் தொடுக்கப்பட்ட பெருநாசகாரப் போர் காரணமாக தாயகத்தில் இருந்து வெளியேறிய மக்கள் புலம்பெயர் தமிழ் சமூகம் என்ற ஒரு திரள்நிலையில் உருவாகியிருந்தனர்.
தாயகத் தமிழரின் முயற்சி
இவ்வாறு மேற்குலக நாடுகளில் தஞ்சம் அடைந்த தமிழர்கள் தமது உயிர்களை காத்துக்கொண்டாலும் காலவோட்டத்தில் தமது மொழியை காக்கமுடியுமா? என்ற ஐயமும், கவலைகளும் எழுந்திருந்தன.
இந்த நிலையிலேயே புலம்பெயர் நாடுகளில் தமிழ்மொழியை காக்கும் வகையில் பல அமைப்புகள் உருவாகியிருந்தன. அந்தவகையில் பிரான்சில் 90களின் இறுதியில் தமிழ்மொழி கல்வியை ஒருங்கிணைப்பதற்காக தமிழ்ச்சோலைத் தலைமைப்பணியகம் உருவாக்கப்பட்டிருந்தது.
25ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அஞ்சல்தலை
அன்றைய நாட்களில் வீடுகளிலும் சிறு மண்டபங்களிலும் தமிழ் ஆர்வலர்களால் நடத்தப்பட்டு வந்த தமிழ் கல்வியை ஒருங்கிணைத்து நெறிப்படுத்தும் நோக்குடன் 1998ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்ச்சோலைத் தலைலைப் பணியகத்தின் கீழ் 64 தமிழ்சோலை கல்விக்கூடங்கள் சுமார் எட்டாயிரம் மாணவர்களுடன் இயங்கி வருகின்றன.
தமிழ்சோலை பணியகம் இந்தவருடம் 25 ஆம் ஆண்டை நிறைவுசெய்யும் பின்னணியில் பிரான்ஸின் அஞ்சல்துறையான லா போஸ்ற்றுடன் இணைந்து இந்த அழகிய அஞ்சல்தலைகளை வெளியிட்டுள்ளது.
தமிழ்ச்சோலையின் இலச்சினை மற்றும் 25 என்ற இலகத்துடன் இந்த அஞ்சல் தலை உருவாக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
