பிரித்தானிய உள்ளூராட்சி தேர்தலில் இறுதிக்கட்ட வாக்களிப்பு தீவிரம்
பிரித்தானியாவின் இங்கிலாந்து உள்ளிட்ட நான்கு தேசங்களிலும் இன்று காலை 07 மணி முதல் மக்கள் உள்ளூராட்சி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் வாக்களித்து வருகின்றனர்.
லண்டன் பெருநகரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள பாடசாலைகள் மற்றும் தேவாலயங்கள் என பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் இன்று இரவு 10 மணி வரை வாக்களிப்பதற்கு மில்லியன் கணக்கான மக்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இங்கிலாந்தைப் பொறுத்தவரை 144 உள்ளூராட்சி சபைகளில் 4 ஆயிரத்து 411 ஆசனங்களுக்கு உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
லண்டனை பொறுத்தவரை அதன் 32 பரோக்கள் எனப்படும் நிர்வாக பகுதிளில் உள்ள 146 உள்ளுராட்சி மன்றங்களுக்கு இந்த தேர்தல் மூலம் ஆயிரத்து 800 இற்கும் அதிகமான உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
தமிழ் மக்கள் கணிசமாக வாழும் ஹரோ உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்கட்சி, கென்சவேட்டிவ் மற்றும் லிப்டெம் ஆகிய கட்சிகளில் இருந்து தமிழ்வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர்.
சுரேஷ் கிருஷ்ணா, சொக்கலிங்கம் யோகலிங்கம், தயா இடைக்காடர், குஹா குமரன் ,ராஜகோபால் திலீபன், சொக்கலிங்கம் கருணலிங்கம், சுபாங்கனி பத்மநாதன், அருணாசலம் ராஜலிங்கம், பிரதீபன் மார்ஷல் அமுதரசன் ஆகியோர் ஹரோவில் உள்ள வட்டாரங்களுக்குரிய உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிடுகின்றனர்.
தொழிற்கட்சியை பொறுத்தவரை 2019 இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் கணிசமான ஆதரவை இழந்ததால் அதனை மீண்டும் பெறுவதற்குரிய களமாக இந்தத் தேர்தல் நோக்கப்படுகிறது.
இந்த நிலையில் மத்திய லண்டனில் உள்ள வாக்குச்சாவடியில் பிரதமர் பொறிஸ் ஜோன்சன், செல்லப் பிராணியான நாயுடன் வந்து வாக்களித்துள்ளார்.
இதனைத் தவிர வேல்ஸ்சில் 22 உள்ளூராட்சி சபைகளுக்கு ஆயிரத்து 234 உறுப்பினர்களும் ஸ்கொட்லாந்தில் 34 உள்ளூராட்சி சபைகளுக்கு ஆயிரத்து 226 உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
வட அயர்லாந்தில் 18 தொகுதிகளில் இருந்து 90 உறுப்பினர்கள் சட்ட சபைக்கு தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
அந்த வகையில் இங்கிலாந்து மற்றும் வட அயர்லாந்தில் 18 வயதைப் பூர்த்தி செய்தவர்களும் வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்தில் 16 வயதை பூர்த்தி செய்தவர்களும் வாக்களிக்கும் வாய்ப்பை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இன்று இரவு 10 மணிக்கு வாக்களிப்பு நிறைவடைந்த பின்னர் படிப்படியாக அடுத்த சில நாட்களுக்கு தேர்தல் முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.

