ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை - பந்துல திட்டவட்டம்
ஒழுக்கமற்ற செயற்பாடுகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பதன் மூலமே பல்கலைக்கழக அமைப்பைக் காப்பாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (13) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளுக்கு ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க உரிய திணைக்களங்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகத்தில் மோதல்
ஒழுக்கமற்ற முறையில் செயற்படும் மாணவர்களின் கல்விப்பரீட்சையை இரத்து செய்வது போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டுமெனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்திற்குள் போதைப்பொருள் பிரயோகம் தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு பல்கலைக்கழக மாணவர்கள் ஒழுக்கத்துடன் வாழும் சூழலை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் சட்டத்திற்குப் பொறுப்பான அனைத்து தரப்பினருக்கும் அதிபர் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன்மூலம் கல்விசார் மற்றும் கல்விசாரா பணியாளர்கள் பயம் மற்றும் சந்தேகம் இன்றி பல்கலைக்கழகத்தில் செயற்பட முடியும் என தெரிவித்தார்.
ருஹுனு பல்கலைக்கழகத்தில் மோதலில் ஈடுபட்ட அனைத்து மாணவர்களின் கல்விக் கொடுப்பனவுகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான கடுமையான தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதால், அச்சமோ சந்தேகமோ இன்றி செயற்படக்கூடிய இடமாக பல்கலைக்கழக அமைப்பை பிரச்சினையின்றி செயல்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
