பாதாள ஊலக தலைவரின் கொலை வழக்கில் சிக்கிய அரசியல்வாதி! விசாரணைகளில் அதிர்ச்சி தகவல்
எஸ்எப் லொக்கா எனப்படும் பாதாள ஊலக தலைவரின் கொலையில் ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் முன்னாள் காவல்துறை உயர் அதிகாரியொருவருக்கும் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன கார் மீதான துப்பாக்கிச் சூட்டில் கைது செய்யப்பட்டுள்ள பெட்டா என்ற நபர் வழங்கிய வாக்குமூலத்தில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
கொலை திட்டம்
இந்த நிலையில், பெட்டா என்ற குறித்த சந்தேகநபர் எஸ்எப் லொக்கா உடனான தகராறை பயன்படுத்தி கொண்டு, அனுராதபுர உதவிக் காவல்துறை கண்காணிப்பாளர், பிரதி காவல்துறை பரிசோதகர் மற்றும் கஞ்சாவுடன் பிடிபட்டு தற்போது இடைநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் காவல் சார்ஜன்ட் ஒருவருடன் இணைந்து இந்த கொலையை திட்டமிட்டதாக தெரிவித்துள்ளார்.
குறித்த கொலை திட்டத்திற்காக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்குச் சொந்தமானதாக கூறப்படும் ஒரு நிலத்திற்கு சென்று T-56 ஆயுதமும் 4 தோட்டாக்களும் வழங்கப்பட்டு சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியால் சந்தேகநபருக்கு பயற்சி அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலனாய்வுப் பிரிவு விசாரணை
அதனை தொடர்ந்து, ஓகஸ்ட் 5, 2020 அன்று, சந்தேக நபரான பெட்டா, சம்பந்தப்பட்ட காவல்துறை சார்ஜென்டுடன் சேர்ந்து, எஸ்.எப் லொக்காவின் காரை மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று சுட்டுக் கொன்றதாக அவர் வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
கொலைக்குப் பிறகு, அனுராதபுரத்தை சேர்ந்த தொழிலதிபர்கள் குழு ஒன்று சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு ரூ. 130 மில்லியன் வழங்கியதாகவும் பெட்டா கூறியுள்ளார்.
அதன்படி, சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
