ரணில் - மகிந்த தரப்பு கூட்டுச் சதி! பகிரங்கப்படுத்திய சட்டத்தரணி
சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் இணைந்து உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தெரிவித்துள்ளமை இரு தரப்பினரதும் சதித் திட்டமென போராட்டத்தின் சட்டத்தரணிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கை மக்களை ஏமாற்றி மீண்டும் நாட்டை நெருக்கடிக்குள்ளாக்குவதே அவர்களின் திட்டமென இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அந்த அமைப்பின் தலைவர் சட்டத்தரணி அமிலேகொட மாவத்த சுட்டிக்காட்டியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “இலங்கையை பொருளாதார நெருக்கடிக்கு உட்படுத்திய அரசியல் கட்சிகளும் அதன் உறுப்பினர்களும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இவர்கள் நாட்டுக்காக மற்றும் மக்களுக்காக என்ன செய்ய போகிறார்கள் என்பது எமக்கு தெரியாது. அதிபர் ரணில்விக்ரமசிங்க தேர்தல் குறித்த விடயங்களில் தலையிடப் போவதில்லை என தெரிவித்திருந்தார்.
எனினும், அவர் தற்போது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களுடன் கூட்டுச் சதிகளை முன்னெடுத்துக் கொண்டிருக்கிறார்.
ரணில் விக்ரமசிங்க என்பவர் தேர்தலுக்கு அஞ்சுபவர். அவரால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட வெற்றிபெற முடியாது. ரணில் விக்ரமசிங்க ஒரு தோல்வியடைந்த தலைவர் என்பதை முழு உலகும் அறிந்துள்ளது. அவரால் குற்றவாளிகளை தண்டிக்க முடியாது.
லஞ்ச ஊழல் நடவடிக்கை
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் லஞ்ச ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்கள் மற்றும் நாட்டின் இன்றைய நிலைக்கு காரணமானவர்கள் இன்றும் சுதந்திரமாக சுற்றித் திரிகின்றனர்.
அவர்களுக்கு எதிராக
தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க எந்தவொரு
நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்பதை மக்கள்
மறக்க கூடாது” - என்றார்.


பிரிட்டனின் தடை… சிறிலங்காவுக்கு அடுத்த நெருக்கடியா… 6 நாட்கள் முன்
