ராஜபக்சர்களுக்கு பலத்த அடி..! கை நழுவும் ரணில் - அரசியலில் புதிய நகர்வு
இலங்கையில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதற்காக ஐக்கிய தேசியக் கட்சி புதிய கூட்டணி ஒன்றை அமைக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியை முதன்மையாகக் கொண்ட கூட்டணியை அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகளை கட்சி உறுப்பினர்களுடன் மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
புதிய கூட்டணி
இலங்கையில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி பாரிய பின்னடைவை எதிர்நோக்கி இருந்தாலும், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லக்கூடிய தரமான மற்றும் முற்போக்கான சிந்தனையுடைய தலைவர்களும் கொள்கைகளும் தமது கட்சிக்கு இருப்பதாக கட்சியின் உப தலைவர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பாரிய சவாலையும், பொறுப்பையும் ஏற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் முழுப்பொறுப்பையும் ஏற்கும் வகையிலான கூட்டணியை அமைப்பதில் ஐக்கிய தேசியக் கட்சி முன்னிலை வகிக்கும் எனவும் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு ஏனைய அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் தமது கூட்டணிக்கு எதிராக புதிய கூட்டணிகளை அமைக்க நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் ஆண்டின் நடுப்பகுதியில் ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய கூட்டணி அமைக்கப்படும் எனவும் அதன் பின்னர் இலங்கையின் ஆட்சி தமது புதிய கூட்டணியுடன் தொடரும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பெரமுனவின் அரசியல் நகர்வு
ஆனாலும் நாட்டில் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சி காரணமாக தற்போது சிறிலங்கா பொதுஜன பெரமுன தலைமையில், பெரும்பான்மை ஆதரவுடன் அதிபராக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் துணையுடனே தாமும் அரசியலை முன்னகர்த்தப்போவதாக மகிந்த தரப்பு தெரிவித்து வருகின்றது.
இவ்வாறு புதிய கூட்டணியில் ரணில் கால்பதிப்பாராயின் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் நகர்வு கேள்விக்குறியாகும் என துறைசார் விமர்சகர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.