ராஜபக்சர்களின் அரசியல் முகாம் துண்டுதுண்டாக உடைவு - உதயமானது புதிய கூட்டணி (காணொளி)
இலங்கைக்கு மீண்டும் திரும்பிய முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை அரசியலுக்குள் இழுத்தெடுக்கும் ஆசைகள் காட்டப்பட்டாலும், ராஜபக்சர்களின் அரசியல் முகாம் தற்போது துண்டுதுண்டாக உடையும் விதமாக இன்று புதிய அரசியல் கூட்டணி ஒன்று உதயமாயுகிள்ளது.
முன்னர் ஆளும் கட்சியில் (SLPP) அங்கம் வகித்து பின் சுயாதீனமாக செயற்படப்போவதாக அறிவித்த 15 நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவே இந்தப் புதிய கூட்டணியை அமைத்துள்ளது.
கொழும்பு மகரமக தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வளாகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில், தமது கூட்டணியின் பெயரை “மேலவை இலங்கை கூட்டணி” என பகிரங்கப்படுத்தியுள்ளனர்.
கூட்டணியின் தலைவராக விமல் வீரவன்ச
புதிய அரசியல் கூட்டணியின் தலைவராக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நியமிக்கப்பட்டுள்ளார். புதிய கூட்டணியின் பெயர் மற்றும் சின்னம் என்பனவும் இன்று பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய கூட்டணியின் மூலம் மக்களுக்கு புதியதொரு எதிர்காலம் கிடைக்கும் எனவும், தூரநோக்குடனும் பல வேலைத்திட்டங்களை அடிப்படையாக கொண்டும் இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார கூறியுள்ளார்.
8 சுயேச்சைக் கட்சிகள் ஒன்றிணைவு
இலங்கையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்திற்கான ஒரு ஆரம்பமே இந்தப் புதிய கூட்டணியின் உருவாக்கம் எனவும், இந்தக் கூட்டணியில் 8 சுயேச்சைக் கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.