100 நாட்களில் அநுர அரசு படுதோல்வி : எதிர்க்கட்சி எம்.பி கடும் விமர்சனம்
தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும் ஆட்சிக்கு வந்து 100 நாட்களை பூர்த்தி செய்துள்ள நிலையில், இந்த அரசாங்கத்தை மிகவும் தோல்வியடைந்த அரசாங்கமாக மக்கள் பார்க்க ஆரம்பித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளருமான கயந்த கருணாதிலக்க(gayantha karunathilaka) தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின்(sjb) தலைமைக் காரியாலயத்தில் நேற்று (02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தோல்வியடைந்த அரசாக பார்க்கும் மக்கள்
“இதுவரை அரசாங்கமும் ஜனாதிபதியும் 100 நாட்களை நிறைவு செய்துள்ளனர். 100 நாட்களுக்குள் மிகவும் தோல்வியடைந்த அரசாக இந்த அரசாங்கத்தை மக்கள் பார்க்க ஆரம்பித்துள்ளனர். ஒருபுறம், 24 மணி நேரத்தில் மக்களுக்கு ஒரு பேனாவால் விரைவாக நிவாரணம் வழங்குவது எப்படி என்று தேர்தல் மேடைகளில் தொடர்ந்து கூறப்பட்டது. மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள அநியாய வரிகளை எவ்வாறு அகற்றுவது என்பது குறித்து தொடர்ந்து உரையாற்றினார். காலவரையின்றி எண்ணெய் விலையை குறைப்பது எப்படி என்பதை விரிவாக விளக்கி பேசினார்.
அநியாய வரிகள் மற்றும் சுரண்டல் கமிஷன்களை அகற்றி, குறைந்த விலையில் எரிபொருள் கொடுப்பது எப்படி என்பதை மக்களுக்கு செய்து காட்டினார். மின்கட்டணத்தை எவ்வாறு குறைப்பது என ஜனாதிபதியும் அமைச்சர்களும் கணக்கிட்டு மக்களுக்கு விளக்கமளித்து இந்த தொகைக்கு விலை குறைக்கப்படும். இதையெல்லாம் 100 நாட்களில் எப்படி செய்வது என்பதுதான் தேர்தல் மேடைகளில் பேசப்பட்டது.ஆனால், 10 நாட்கள் கடந்தும், மூன்றில் இரண்டு பங்கிற்கு மேல் அதிகாரம் இருந்தும், அந்த பணியை இந்த அரசு செய்யவில்லை.
நல்லாட்சி அரசாங்கம் செய்த சாதனை
மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும் சிறுபான்மை அரசாங்கமாக இருந்த நல்லாட்சி அரசாங்கம் 100 நாட்களுக்குள் எவ்வளவோ வேலைகளைச் செய்தது என்பதை அரசாங்கத்திற்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றோம்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் அரச ஊழியர்களின் சம்பளத்தை 100 நாட்களுக்குள் 10,000 ரூபாவால் அதிகரிக்க முடிந்தது. 100 நாட்களுக்குள் நல்லாட்சி அரசாங்கத்தினால் எரிபொருள் விலை குறைப்பு வாக்குறுதியை நிறைவேற்ற முடிந்தது. மின் கட்டணத்தை கணிசமான அளவு குறைத்து சலுகைகள் கொடுக்க முடிந்தது.
நல்லாட்சி அரசாங்கத்தினால் பல அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்தது. சிறுபான்மை அரசாங்கம் என்ற வகையில் 100 நாட்களுக்குள் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு நாடாளுமன்றில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தகவல் அறியும் சட்டம் போன்ற சட்டங்கள் வெற்றிகரமாக தொடங்கப்பட்டன. சுயாதீன ஆணைக்குழுக்களை பலப்படுத்துவதற்கான பல நடவடிக்கைகளை நல்லாட்சிஅரசாங்கம் 100 நாட்களுக்குள் முன்னெடுத்து செயற்பட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |