சிறைச்சாலை மீது பயங்கரவாதிகள் வெடி குண்டுத் தாக்குதல்! 600 கைதிகள் தப்பியோட்டம் - நைஜீரியாவில் சம்பவம்
சிறைச்சாலை மீது வெடி குண்டுத் தாக்குதல்
நைஜீரியாவில் சிறைச்சாலை ஒன்றின் மீது பயங்கரவாதிகள் குண்டுத் தாக்குதல் நடத்திய நிலையில், 600 கைதிகள் தப்பியோடியுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
நைஜீரியாவின் தலைநகர் அபுஜாவில் உள்ள சிறை மீதே பயங்கரவாதிகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிறையின் சுவர் இடிந்து விழுந்தது. இதையடுத்து 600 இற்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளனர்.
சிறைக் காவலர் பலி
இந்தத் தாக்குதலில் சிறைக் காவலர் ஒருவர் பலியானார். சிறையில் அடைக்கப்பட்டிருந்த போகோ ஹராம் அமைப்பைச் சேர்ந்தவர்களை விடுவிக்கவே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தப்பி ஓடிய கைதிகளில் 300 சிக்கினர்
இந்த நிலையில் தப்பி ஓடிய கைதிகளில் 300 பேரை காவல்துறையினர் பிடித்துள்ளனர். மற்றவர்களை தேடும் பணிகள் தொடர்கின்றன.
இதுகுறித்து அந்நாட்டு உள்துறை அமைச்சகத்தின் செயலாளர் ஷூஜப் பெல்கோர் கூறும்போது, "அபுஜாவின் குஜேவில் உள்ள சிறைச்சாலை மீது சக்திவாய்ந்த வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
அவர்கள் போகோஹராம் அமைப்பைச் சேர்ந்தவர்கள். சிறையில் உள்ள சக கூட்டாளிகளை மீட்க இத்தாக்குதலை நடத்தி உள்ளனர்' என்றார்.
