உலக வல்லரசான அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தல்: முடிவுகள் எப்போது வெளியாகும்!
உலக வல்லரசான அமெரிக்காவின் (USA) ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவுகள் தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இலங்கை நேரப்படி நவம்பர் மாலை 4.30 ற்கு ஆரம்பமாகிய வாக்கு பதிவுகள் இன்று காலை 5.30 மணியளவில் முடிவடையும்.
இந்நிலையில் எப்போது தேர்தல் முடிவுகள் வெளியாகும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
வாக்குப்பதிவு
வாக்குப்பதிவு முடிந்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கிவிடும்.இருப்பினும், அமெரிக்காவில் வாக்குச் சீட்டு முறையே பின்பற்றப்படும் நிலையில், வாக்கு எண்ணிக்கை முழுமையாக முடிய சில நாட்கள் வரை ஆகும்.
அமெரிக்காவைப் பொறுத்தவரைத் தேர்தல் விதி மாகாணம் வாரியாக மாறுபடும். அதேநேரம் அமெரிக்காவில் எலக்டோரல் காலேஜ் முறை பின்பற்றப்படும் நிலையில், எலக்டோரல் காலேஜ் வாக்குகள் பதிவு செய்யப்படும் வரை தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாது.
அதாவது ஒவ்வொரு மாகாணத்திலும் மக்கள்தொகை அடிப்படையில் எலக்டோரல் காலேஜ் எண்ணிக்கை இருக்கும்.
எலக்டோரல் காலேஜ்
அதிக மக்கள் தொகை கொண்ட மாகாணத்திற்கு அதிக எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் குறைந்த மக்கள்தொகை கொண்ட மாகாணத்திற்குக் குறைந்த எலக்டோரல் காலேஜ் (Electoral college) வாக்குகளும் இருக்கும்.
இந்த எலக்டோரல் காலேஜ் இணைந்தே ஜனாதிபதியை தெரிவு செய்யும். மேலும், மாகாணத்தில் ஒரு வாக்கு அதிகம் பெற்றாலும் அவருக்கே எல்லா எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் போகும்.
அதாவது ஜார்ஜியா மாகாணத்தில் 16 எலக்டோரல் காலேஜ் வாக்குகள் உள்ள நிலையில், அங்கு டிரம்பை காட்டிலும் கமலா ஹாரிஸ் ஒரு வாக்கு அதிகம் பெற்றாலும் இந்த எலக்டோரல் காலேஜ் வாக்குகளும் கமலா ஹாரிஸுக்கே செல்லும். டிரம்பிற்கு ஒரு வாக்கு கூட கிடைக்காது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
இந்த எலக்டோரல் காலேஜ் வரும் டிசம்பர் மாதம் 17ம் திகதி வாக்களிப்பார்கள்.
ஜனாதிபதி தேர்தலில் யார் எத்தனை மாகாணங்களில் வென்றுள்ளார்களோ அதைப் பொறுத்தே இந்த எலக்டோரல் காலேஜ் முடிவுகள் இருக்கும். டிசம்பர் 17ம் திகதி பதிவாகும் எலக்டோரல் காலேஜ் வாக்குகள் ஜனவரி 6ம் திகதி எண்ணப்பட்டு முடிவு இறுதி செய்யப்படும்.
அதாவது ஜனவரி 6ம் திகதி தான் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி யார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். அதனை தொடர்ந்து ஜனவரி 20ம் திகதி புதிய ஜனாதிபதி பதவியேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |