போர் பதற்றத்தின் மத்தியில் முக்கிய அமைச்சரின் பதவியை நீக்கிய நெதன்யாகு! வெளியான காரணம்
இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் யோவ் கேலன்ட்டை (Yoav Gallant) பதவி நீக்கம் செய்துள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார்.
நாட்டின் இராணுவ நடவடிக்கைகளை அவர் சரியாகக் கையாள்கிறார் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டதாகக் கூறி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இஸ்ரேலின் பாதுகாப்புத் துறை அமைச்சராக கேலன்ட் இருந்து வந்த நிலையில், அவர் நீக்கப்பட்டுள்ள நிலையில் கேலன்டிற்கு பதிலாக தற்போது வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ள இஸ்ரல் காட்ஸ் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பதவியேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதவி நீக்கம்
மேலும், கிடியோன் சார் என்பவர் இஸ்ரேல் நாட்டின் புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த உத்தரவு வெளியான உடனேயே கேலன்ட் தனது ட்விட்டரில், "இஸ்ரேல் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதே என் வாழ்வின் முக்கிய பணியாக இருந்தது. இனிமேலும் அதுவே தான் இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.
காசாவில் ஹமாஸுக்கு எதிராகக் கடந்த 13 மாதங்களாக இஸ்ரேல் போரிட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் கடந்த சில மாதங்களாகவே கேலன்ட் மற்றும் நெதன்யாகு இடையே பல கருத்து வேறுபாடுகள் இருந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதைச் சரி செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அதற்குப் பெரியளவில் பலன் கிடைக்கவில்லை. இருவருக்கும் இடையேயான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே இருந்துள்ளது.
போரில் பின்னடைவு
இருவருக்கும் இடையே உள்ள இந்த மோதல் எதிரிகளுக்கும் தெரிந்து இருந்ததாகவும் இதனால் போரிலும் கூட இஸ்ரேல் சில பின்னடைவுகளைச் சந்திக்க நேர்ந்ததாகவும் நெதன்யாகு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை முடிவுகளுக்கு முரணான முடிவுகளை கேலன்ட் எடுத்ததாகவும் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
அதேநேரம் கேலன்ட் அமைச்சரவையில் இருந்து நீக்கப்படுவது இது முதல்முறை இல்லை. கடந்தாண்டு இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்த சில காலத்திற்கு முன்பு கேலன்ட்டை அமைச்சரவையில் இருந்து நெதன்யாகு நீக்கினார்.
இருப்பினும், அதற்கு மிகக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பவே வேறு வழியின்றி மீண்டும் கேலன்ட்டை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |