பாலஸ்தீன ஜனாதிபதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தடை
அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க பாலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் வருவதற்கு அந்த நாடு தடை விதித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் தங்களின் கடும் எதிா்ப்பை மீறி அந்தக் கூட்டத்தில் பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அந்தஸ்து அளிக்கவிருப்பதாக பிரான்ஸ், கனடா, பிரிட்டன், அவுஸ்திரேலியா உள்ளிட்ட 15 நாடுகள் தெரிவித்துள்ள சூழலில், அதைத் தடுக்கும் வகையில் அமெரிக்கா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அமைதி முயற்சிகளை பாதிக்கும் வகையிலான செயற்பாடு
இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
பாலஸ்தீன விடுதலை அமைப்பு (பிஎல்ஓ) மற்றும் பாலஸ்தீன ஆணையத்தைச் சோ்ந்த மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்ட 80 பேருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளது. அவா்கள் அமைதி முயற்சிகளை பாதிக்கும் வகையில் செயல்படுவதாக அமெரிக்கா கருதுகிறது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் மாா்கோ ரூபோ கூறுகையில், ‘ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்துக்காக அமெரிக்கா வர விசா மறுக்கப்பட்டுள்ளவா்கள், பாலஸ்தீன பிரச்னைக்கு தீா்வு காண்பதற்கான முயற்சிகளைக் குலைக்கும் வகையில் அரைகுறையான ஒரு பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்று கோருகின்றனா்’ என்று குற்றஞ்சாட்டினாா்.
அமெரிக்காவின் அறிவிப்பை வரவேற்றுள்ள இஸ்ரேல்
அமெரிக்காவின் இந்த அறிவிப்பை இஸ்ரேல் வரவேற்றுள்ளது. இது குறித்து இஸ்ரேல் வெளியுறவு அமைச்சா் கிடியோன் சாா் கூறுகையில், ‘பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் முயற்சிகளை தடுக்க அமெரிக்கா எடுத்துள்ள இந்த முடிவு முக்கியமானது’ என்றாா்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
