அமெரிக்கா விதித்துள்ள வரி : இறப்பர் தொழிலாளர்களுக்கு ஏற்படவுள்ள சிக்கல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) அறிமுகப்படுத்தியுள்ள புதிய வரியின் காரணமாக பல்வேறு வர்த்தகத்தில் ஈடுபடும் தரப்பினரும் பாதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இலங்கையில் இறப்பர் தொழிலாளர்கள் பாரியளவு பாதிப்பை எதிர்நோக்கக் கூடும் என அந்த தொழில்துறையினர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையில், சுமார் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் இறப்பரை அடிப்படையாகக் கொண்டு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இறப்பர் ஏற்றுமதி
இந்த நிலையில் நாட்டின் முக்கிய ஏற்றுமதித் துறைகளில் ஒன்றான இயற்கை இறப்பர் தொழில் வேலைவாய்ப்பு மற்றும் அந்நியச் செலாவணி வருவாய் ஆகிய இரண்டிற்கும் கணிசமாக பங்களிக்கிறது.
தற்போதைய வரி 12.5 சதவீதமாக இருப்பதால், மேலதிகமாக 44 சதவீதம் மொத்த வரியை 56.5 சதவீதமாக உயர்த்தும், இதனால் இலங்கை இறப்பர் ஏற்றுமதி அமெரிக்க சந்தையில் மிகவும் போட்டித்தன்மையற்றதாக மாறும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது இப்பர் தட்டுவோரின் குடும்பங்கள் மற்றும் இலங்கையின் பரந்த பொருளாதாரம் ஆகியவற்றில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1.2 மில்லியன் அமெரிக்க டொலர்
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில், அமெரிக்காவிற்கான இலங்கையின் இயற்கை இறப்பர் ஏற்றுமதி 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இலங்கையில் ஆடைத் தொழில்துறை கடுமையாகப் பாதிக்கப்படக்கூடும் எனச் சுதந்திர வர்த்தக வலய பொதுச் சேவையாளர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் என்டன் மாகஸ் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
