உலகின் நாசகார ஆயுதங்கள் உக்ரைனுக்கு..!
உலகின் நாசகார ஆயுதங்களில் ஒன்றான கொத்துக்குண்டுகள் உட்பட உக்ரைனுக்கான புதிய இராணுவ உதவியை அமெரிக்கா அறிவிக்காலம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்ய துருப்புகள் மீது உக்ரைனிய படையினர் அண்மையில் தொடுத்த எதிர் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க வெற்றிகளை ஈட்டாத நிலையில் சர்ச்சைக்குரிய கொத்துக்குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை உக்ரைனுக்கு அனுப்புவதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கொத்துக்குண்டுகள் அல்லது கிளெஸ்டர் பொம்ஸ் என அழைக்கப்படும் இந்த நாசகார குண்டுகள் பத்து முதல் நூற்றுக்கணக்கான சிறிய குண்டுகளை சுமந்து செல்லக்கூடியவை. இவ்வாறான குண்டுகளை போர் விமானங்களில் இருந்து வீசலாம் அல்லது ஏவுகணைகளில் இருந்தும் ஏவிக்கொள்ளலாம்.
கொடிய அழிவுகளை ஏற்படுத்தும்
கொத்துக்குண்டுகளை உள்ளடக்கிய குண்டுகள் உடையும் போது, அவற்றில் இருந்து வெளியேவரும் பல குண்டுகள் அந்தப் பகுதியில் விழுந்து வெடித்து பெரும் அழிவை ஏற்படுத்தக்கூடியவை.
தற்போது அமெரிக்கா உக்ரைனுக்கு அளிக்கவுள்ள கொத்துக்குண்டுகள் ஹோவிட்சர் பீரங்கிகளில் இருந்து சுடப்படும் ரகமாகத் தெரிகிறது. 155 மில்லிமீற்றர் அளவான ஒவ்வொரு கொத்தணி பீரங்கிக் குண்டுகளுக்குள்ளே 88 சிறிய குண்டுகள் இருக்கும்.
இவை அனைத்தும் தனித்தனியாக் சுமார் 10 சதுர மீற்றர் வரையில் கொடிய அழிவுகளை ஏற்படுத்தக்கூடிய நிலையில் ரஷ்ய இராணுவத்தின் பீரங்கிகள் மற்றும் காலாட் படைக்கு அழிவு ஏற்படுத்தகூடிய வகையில் இந்த ஆயதங்களை அமெரிக்கா வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொத்துக்குண்டு பயன்படுத்த தடை
உக்ரைனிய போரில் ஏற்கனவே உக்ரைனியர்களும் ரஷ்யர்களும் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தியுள்ளனர். அண்மையில் துருக்கியால் வழங்கப்பட்ட கொத்துக்குண்டுகளை உக்ரைன் பயன்படுத்தியும் இருந்தது.
உலகில் ஐரோப்பிய நாடுகள் உட்பட்ட 123 நாடுகள் கொத்துக்குண்டுகளின் பயன்பாடு, உற்பத்தி மற்றும் பரிமாற்றங்களை தடை செய்திருந்தாலும், அமெரிக்கா, உக்ரைன், ரஷ்யா மற்றும் 71 நாடுகள் இவற்றை தடைசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.