அமெரிக்காவால் ராஜபக்ச முகங்களுக்கு தலையிடி
இலங்கை வளங்களை கொள்ளையடித்து நாட்டுக்கு பெரிய நிதிப் பேரிடரையும் பொருளாதார வங்குரோத்து நிலைமையும் ஏற்படுத்திய சிறிலங்காவின் முக்கிய குடும்பத்தில் உள்ள பிரமுகர்களை மையப்படுத்தி அமெரிக்க காங்கிரஸ் விரைவில் விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அமெரிக்க காங்ரஸின் ஜனநாயக கட்சி உறுப்பினர் ஸ்ரிவன் ஹோர்ஸ்ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
பணமோசடி மற்றும் சொத்துப் பறிப்பு ஆகியவற்றை விசாரிக்கும் அதிகாரத்தையுடைய காங்கிரஸின் நிதிச்சேவைக்குழுவின் ஆளுங்கட்சி உறுப்பினரான கொங்ரஸ் உறுப்பினர் ஸ்ரிவன் ஹோர்ஸ்ஃபோர்ட் (Steven Horsford) தெரிவித்துள்ள இந்தவிடயம் சிறிலங்காவின் முன்னாள் நிதியமைச்சர் பஷில் ராஜபக்ச உட்பட்ட ராஜபக்ச முகங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க குடியுரிமையை கொண்ட வெளிநாட்டவர்களின் நிதி முறைகேடுகளின் அடிப்படையில் இலங்கையின் வளங்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களை கண்டுபிடிக்கும் விசாரணைகள் விரைவில் ஆரம்பிக்கப்படலாம் என எதிர்வு கூறியுள்ள Steven Horsford, இது குறித்து கிறகோரி மீக்ஸ் Gregory Meeks உட்பட்ட சில மூத்த உறுப்பினர்களுடன் தான் ஆலோசனைகளை நடத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்க அரசாங்கம் இந்த நகர்வுகளை அறிந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
