மக்களிடம் கையளித்த காணிகளிலும் நுழைந்து சூறையாடும் இராணுவம் - கடும் விசனம் வெளியிட்டுள்ள மக்கள்!
வலி.வடக்கில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக சிறிலங்கா படையினர் கைப்பற்றி வைத்திருந்த காணிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டன.
இவ்வாறான நிலையில், விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவதாக வீட்டு உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சிவில் உடையில் தம்மை இராணுவம் என்று அடையாளப்படுத்துவோரே இவ்வாறான திருட்டு வேலைகளில் ஈடுபடுவதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
திருட்டு
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் காணப்படும் பெறுமதி வாய்ந்த உபகரணங்களை இரவு நேரங்களில் சிவில் உடையில் இராணுவத்தினர் எனக் கூறி பிரவேசிப்பவர்கள் திருடிச் செல்வதாக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 3ஆம் திகதி விடுவிக்கப்பட்ட 108 ஏக்கர் காணியில் சில வீடுகள் கட்டடங்களும் காணப்படுகின்றன. அவ்வாறு காணப்படும் வீடுகளில் தற்போது சில பெறுமதியான பொருட்கள் இருப்பதாகவும் அதனையே இரவு வேளைகளில் திருடிச் செல்கின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவ முகாமிற்குள் சென்ற திருடர்கள்
நேற்று இரவு 8 மணியளவில் சிவில் உடையில் இராணுவத்தினர் எனக் கூறி அடையாளப்படுத்திய 10ற்கும் மேற்பட்டோர் திருடிச் சென்ற போது, அயலில் உள்ளவர்களால் வீட்டின் உரிமையாளர்களிற்கு தகவல் கிடைத்து, சம்பவ இடத்திற்கு உரிமையாளர்கள் சென்று பார்த்த போது, திருடச் சென்றவர்கள் உரிமையாளர்களை அச்சுறுத்தியதோடு, திருடிய பொருட்களை இராணுவ முகாமிற்கு எடுத்துச் சென்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உரிமையாளர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,
“எமது காணிகளை மீண்டும் எம்மிடமே ஒப்படைப்பது போல் சர்வதேசத்திற்கு அமைச்சர் உள்ளிட்டோர் வந்து படம்காட்டிவிட்டுச் செல்ல இராணுவத்தினர் இரவில் திருடர்கள் போன்று வந்து பிடுங்கிச் செல்கின்றனர்.
தொடரும் அட்டகாசம்
33 வருடம் எம்மை அலைய விட்டும் பசி அடங்காத நிலையில் எஞ்சியவற்றையும் பிடுங்கிச் செல்லவே முனைகின்றனர்.
எனவே இந்த விடயத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகள் தலையிட்டு எமது சொத்துக்களை பாதுகாத்து தர வேண்டும்” என உரிமையாளர்கள் மனவருத்தத்துடன் தெரிவித்தள்ளனர்.
