வவுனியா பல்கலை முதல் ஆண்டு மாணவன் திடீர் மரணம் - வலுக்கும் சந்தேகம்
வவுனியா பல்கலைக்கழகத்தின் (University of Vavuniya) தகவல் தொழில்நுட்ப பீடத்தின் முதல் ஆண்டு மாணவர் ஒருவர் 31 ஆம் திகதி இரவில் உயிரிழந்துள்ளதாக வவுனியா பூவரசன்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞரே இவ்வாறு மரணமாகியுள்ளார்.
இந்த மரணத்திற்கு பகிடிவதை காரணமாக இருக்கலாம் என மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதை
உயிரிழந்த மாணவரின் சகோதரி ஊடகத்திற்கு கருத்து தெரிவிக்கையில், கடந்த 31ஆம் திகதி இரவு பல்கலைக்கழக மாணவர்களின் விருந்தொன்றில் சிரேஷ்ட மாணவர்கள் தனது சகோதரருக்கு பலவந்தமாக மதுபானம் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.

தனது சகோதரனுக்கு வேறு எந்த நோயும் இருந்திருக்கவில்லை என்றும், பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் பகிடிவதை குறித்து பல தடவைகள் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து வவுனியா ஆதார வைத்தியசாலையுடன் தொடர்பு கொண்டு வினவிய போது, அங்குள்ள வைத்தியர் ஊடகங்களுக்கு தகவல் வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
உயிரிழந்த இளைஞரின் உடல், பிரேத பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் மடப்பகுதிக்கு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் மரணத்திற்கான சரியான காரணம், பிரேத பரிசோதனைக்கு பிந்தைய விசாரணையில் வெளிப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பூவரசன்குளம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்படுகின்றன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |