வவுனியா சிறைச்சாலை வதை முகாமை விட மோசமானது! வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டவர்களின் கசப்பான அனுபவம்
வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலை வதை முகாமை விட மோசமானது என்று வெடுக்குநாறிமலையில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த சிவாராத்தி தினத்தன்று வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டு விடுதலையான எட்டு பெரும் இன்று (21) ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் சிறைச்சாலை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் மேற்கண்டவாறு கூறியிருந்தனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “வவுனியா சிறைச்சாலையினை வதை முகாம் என்றே கூறமுடியும். எந்த ஒரு அடிப்படை வளமும் அற்ற ஒரு சிறைச்சாலையாக அது காணப்படுகின்றது.
அடிப்படை தேவைகள்
200பேர் அளவிலான கைதிக இருப்பதற்கான இடவசதி காணப்படுகின்ற நிலையில் அங்கே, நாங்கள் விடுதலையாகும் வரை 586 கைதிகள் அங்கு அடைக்கப்பட்டிருந்தனர்.
அடிப்படை தேவைகளை பெற்றுக்கொள்வது கூட அங்கு சிரமமான விடயமாக இருந்தது, நீர்வசதி மிகவும் பற்றாக்குறையாக இருந்தது. அத்தனை பேருக்கும் சேர்த்து சிறிய நீர்த்தொட்டி ஒன்றே அங்கு அமைக்கப்பட்டுள்ளது. அது தொடர்ந்தும் இயங்குவதில்லை.
ஆறு வாளி தண்ணீரே ஒருநாளில் ஒருவருக்கு வழங்கப்படுகின்றது, அதற்காக இரண்டரை மணி நேரங்கள் காத்திருக்க வேண்டிய நிலை காணப்பட்டது, இந்நிலையில், தற்போதைய வெப்பமான காலநிலையால் கணிசமானவர்கள் சொறி, சிரங்கு போன்ற நோய்களாலும் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அந்த இடத்திலே உயிர் ஆபத்துக்கள் நிகழக்கூடிய வாய்ப்புக்கள் கூட காணப்படுகின்றன,முறையாக நித்திரை கொள்வதற்கான வசதிகள் கூட அங்கு இல்லை.பல கைதிகள் மலசலகூடங்களிலும் குளியலறைகளிலும் உறங்கும் நிலை காணப்படுகின்றது.
தரமற்ற உணவு
உணவின் தரம் மிகவும் மோசமாக காணப்படுகிறது, கிரந்தித் தன்மை கூடிய சூரை மீனே தினமும் உணவுக்கு தரப்படுகின்றது, இதனால் பலர் சிரங்கு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவற்றையெல்லாம் பார்க்கும் போது இது அரசாங்கத்தின் திட்டமிட்ட செயற்பாடாகவே எண்ணத் தோன்றுகின்றது, அத்துடன் பெரிய குற்றங்கள் செய்தவர்கள், சந்தேகநபர்கள், சிறிய குற்றம் செய்தவர்கள் என்று வகைப்படுத்தப்படாமல் அனைவரும் ஒரே இடத்திலேயே அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் அங்கு செல்லும் பலர் பெரிய குற்றவாளிகளாக மாற்றப்படும் நிலை இயல்பாகவே காணப்படுகின்றது, இதனால் குற்றவாளிகளும், குற்றங்களும் மேலும் அதிகரிக்கும் நிலையே ஏற்படுகின்றது.
அங்கு அடைக்கப்பட்டுள்ள கைதிகள் அனைவரதும் வேண்டுகோளாகவும் இது காணப்படுகின்றது. எனவே இந்த நிலமை மாற்றப்பட வேண்டும்.” என தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |