வெடுக்குநாறிமலையில் ஏணிப்படி பொருத்தியமை தொடர்பான வழக்கு - ஆலய நிர்வாகம் விடுதலை!
வவுனியா வெடுக்குநாறிமலையில் ஏணிப்படி பொருத்தியமை தொடர்பாக நெடுங்கேணி காவல்துறையினரால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இருந்து ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றத்தால் இன்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பான வழக்கு இன்றையதினம் வவுனியா நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிமன்ற அறிவிப்பு
இதன்போது குறித்த வழக்கை தொடர்ந்து நடாத்துவதற்கு போதிய சான்றுகள் இன்மையால் குறித்த வழக்கில் இருந்து ஆலயப்பூசகர் மற்றும் நிர்வாகத்தினர் இன்று விடுவிக்கப்பட்டனர்.
குறித்த வழக்கில் ஆலயநிர்வாகம் சார்பாக ஆயரான சிரேஸ்ட சட்டத்தரணி திருஅருள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது,
"கடந்த 2019 ஆம் ஆண்டு ஆலயத்தில் மரத்திலான ஏணிப்படி ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
அதனை சீரமைத்து ஏணிப்படி ஒன்று அமைக்கப்பட்டமை தொடர்பாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
குறித்த ஏணிப்படியை சீரமைத்தமைக்கான சான்றுகள் இல்லை என அரச சட்டவாதிகளால் இன்றையதினம் நீதிமன்றிற்கு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து குறித்த மூன்று பேரும் இன்று விடுவிக்கப்பட்டனர்" என்றார்.
