மீண்டும் அதிகரித்த மரக்கறிகளின் விலைகள்
உள்ளுர் சந்தையில் மலையக மற்றும் கீழ்நாட்டு மரக்கறிகள் அனைத்தின் விலைகளும் அதிகரித்துள்ளதாக மரக்கறி வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகள் போதுமான மரக்கறிகளை வழங்க முடியாததால், மரக்கறிகளின் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளி ரூ.800க்கும், கரட் கிலோ ரூ.400க்கும், கத்தரிக்காய் கிலோ ரூ.450க்கும், உருளைக்கிழங்கு கிலோ ரூ.300க்கும், வெண்டைக்காய், பீட்ரூட், முட்டைகோஸ் ரூ.300க்கும், ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.600க்கும் விற்பனை செய்யப்படுகின்றன.
இதேவேளை, உள்நாட்டு மரக்கறிகளின் விலையும் அதிகரித்துள்ள நிலையில், ஒரு கிலோ மரக்கறிகள் 400 ரூபாவாக அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
மரக்கறி விவசாயிகளுக்குத் தேவையான இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் விவசாய இரசாயனங்கள் இன்மையே மரக்கறிகளின் குறைந்த விளைச்சலுக்கு முக்கியக் காரணம் என அகில இலங்கை பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.
கடந்த பருவத்தில் மரக்கறி விவசாயிகள் இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் விவசாய இரசாயனங்களை பதுக்கி வைத்திருந்ததாகவும், தற்போது அந்த கையிருப்புகள் குறைவதால் மரக்கறிச் செய்கை பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.