லசந்த கொலையின் சந்தேக நபர்கள் விடுதலை : சட்டமா அதிபர் திணைக்களத்தின் நிலைப்பாடு
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் (Lasantha Wickrematunge) கொலை தொடர்பாக மூன்று சந்தேகநபர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் சட்டமா அதிபர் திணைக்களம் இது குறித்து ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
போதுமான ஆதாரங்கள், சாட்சியங்கள் இல்லை என்ற அடிப்படையில் மூன்று சந்தேகநபர்களையும் வழக்கிலிருந்து விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் (08) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் (Anura Kumara Dissanayake) சட்டமா அதிபருக்கும் இடையில் இரகசிய சந்திப்பு ஒன்று நடைபெற்ற போது நீதியமைச்சர் ஹர்சன நாணயக்காரவும் (Harshana Nanayakkara) கலந்து கொண்டிருந்தார்.
நீதி அமைச்சர் தெரிவிப்பு
இந்த சந்திப்பு தொடர்பில் தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்ட நீதி அமைச்சர், தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் சட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
ஒரு வழக்கு தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினால் சட்டமா அதிபருக்கு ஆலோசனை வழங்கவோ அழுத்தம் கொடுக்கவோ முடியாது. எனினும் என்ன நடக்கின்றது என்பது குறித்து ஜனாதிபதி கேட்டறிந்துகொண்டார்.
சட்டமா அதிபரை பதவி நீக்குவது எதுவும் பேசப்படவில்லை, சட்டமா அதிபரை பதவியில் இருந்து நீக்குவதானால் அதற்கு ஒரு நடைமுறை இருக்கின்றது.” என தெரிவித்தார்.
கேள்வியெழுப்பிய ஜனாதிபதி
இதேவேளை குறித்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்கள் குறித்து ஊடகவியலாளர் ஒருவர் தெரிவிக்கையில், குறித்த 3 பேரையும் விடுதலை செய்வதற்கு எந்த அடிப்படையில் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சட்டமா அதிபரிடம் ஜனாதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்குப் பதிலளித்த சட்டமா அதிபர், இந்த 3 பேருக்கும் எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்திய நபர்களும் சாட்சியங்களை வழங்கிய நபர்களும் எங்கே இருப்பதாக கண்டுபிடிக்க முடியவில்லை.
அத்துடன் அவர்கள் ஏற்கனவே முன்வைத்த குற்றச்சாட்டுக்களையும் சாட்சியங்களையும் மீளப்பெற்றுள்ளார்கள். எனவே சந்தேக நபர்களை விடுதலை செய்வதை விட வேறு வழியில்லை என பதிலளித்துள்ளார்.
இந்த நிலையில் இவர்கள் எந்தக் காலகட்டத்தில் இந்த சாட்சியங்களை மீளப்பெற்றுள்ளார்கள் என ஜனாதிபதி கேள்வியெழுப்பியதற்கு 2020 மற்றும் 2021 காலகட்டங்களில் இவ்வாறு நடைபெற்றது என பதிலளித்துள்ளார்.
லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) காலகட்டத்தில் தான் இவ்வாறு நடைபெற்றுள்ளதாகவும் இது ஒரு அரசியல் பழிவாங்கலாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |