நீதித்துறைக்கு எதிரான அடக்கு முறை : கறுப்புக் கொடி ஏந்தி மன்னாரில் கவனயீர்ப்பு போராட்டம்!(படங்கள்)
'சுயாதீன நீதித் துறையில் அரசியல் தலையீட்டை தடுப்போம்' எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக நீதி மற்றும் பொறுப்பு கூறல் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள தாமதம் மற்றும் நீதித்துறை,நீதிபதிகள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அடக்கு முறைக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று புதன்கிழமை (4) மன்னார் மாவட்ட இளைஞர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்பினர் இணைந்து கறுப்புக் கொடிகளை ஏந்தி போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
மன்னார் நகர பிரதான சுற்றுவட்ட பகுதியில் இன்று காலை 10 மணி தொடக்கம் 12 மணி வரை குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
கொடிகளை ஏந்தியவாறு
இதன் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கருப்புக் கொடிகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் இலங்கை அரசாங்கத்தின் தொடர்சியான அடக்குமுறை செயல்பாடுகளை கண்டித்து பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்,சட்டத்தரணி செல்வராசா டினேசன்,உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள், மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் தலைவர் யாட்சன் பிகிராடோ, பணியாளர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.