பொறுப்புக்கூறல் அழுத்த பின்னணியில் ஐ.நா விரையும் அநுர! கொழும்பில் ஒன்றுகூடிய இராஜதந்திரிகள்
நல்லிணக்க பொறிமுறை மற்றும் யுத்தக்கால உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை குறிப்பிட்டுள்ள தவறுகளை நிவர்த்தி செய்ய அரசாங்கத்திற்கு 'அதிக காலம் மற்றும் விட்டுக்கொடுப்பும்' தேவை என வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் மாநாட்டில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கலந்துக்கொள்வது தொடர்பில், கொழும்பில் உள்ள இராஜதந்திர சமூகத்திற்கு இந்த விடயத்தை வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் 60வது அமர்வு செப்டம்பர் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
தீர்மானம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை
ஐக்கிய இராச்சியம் உட்பட பல நாடுகளின் குழுமம் இம்முறை இலங்கை பிரச்சினை தொடர்பில் மேலும் ஒரு தீர்மானத்தை முன்வைக்கிறது. ஆரம்ப கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன
ஆனால் தீர்மானம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் அலுவலகம் குறிப்பிட்டுள்ள தவறுகளை நிவர்த்தி செய்ய இலங்கைக்கு 'அதிக காலம் மற்றும் விட்டுக்கொடுப்பும்' தேவை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதனால் இலங்கைக்கு தனது கருத்துக்களை முன்வைக்க இராஜதந்திர சமூகத்தின் ஆதரவு தேவையெனவும் குறிப்பிட்டார்.
ஐ.நா மனித உரிமைகள் பேரவை
இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டக், நடைபெறவுள்ள அமர்வில் தனது அறிக்கையை முன்வைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானங்களை கடந்த அரசாங்கம் இராஜதந்திர ரீதியாக தாக்கல் செய்தது. கடந்த ஆண்டு இந்தத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டபோது தற்போதைய அரசாங்கமும் அந்தத் தீர்மானத்தை நிராகரித்தது. கடந்த 11 மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட முன்னேற்றங்கள் குறித்தும் அமைச்சர் இராஜதந்திர சமூகத்திற்கு விளக்கினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட வெளியுறவுச் செயலாளர் அருணி ரணராஜா, செப்டம்பர் 24 ஆம் திகதி ஜனாதிபதி ஐ.நா பொதுச் சபையில் உரையாற்றுவார் என்றும் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
