செல்வம் அடைக்கலநாதனை கடுமையாக சாடும் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் (Selvam Adaikalanathan) ரெலோ அமைப்பின் தலைமை பொறுப்பில் இருந்து உடனடியாக விலக வேண்டும் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் (Vinthan Kanagaratnam) தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று (7) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், “தமிழ் தேசியத்திற்கு எதிரான விரோதமான செயல்களை செய்யும் கொழும்பில் குற்றவியல் வழக்கு பின்னணிகளை கொண்டவர் யாழ். தேர்தல் மாவட்டத்தில் ரெலோ சார்பில் போட்டியிடுகின்றார். அதனை நான் கடுமையாக எதிர்க்கின்றேன்.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுக்கட்டமைப்பாக சங்கு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என அனைவரும் வேலை செய்த போது, வன்னி தேர்தல் மாவட்டத்தில் சங்கு சின்னத்திற்காக செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்டோர் வேலை செய்யவில்லை.
ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு
அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் (Ranil Wickremesinghe) பெரும் தொகை பணத்தினை பெற்று, சங்கு சின்னத்திற்கு வேலை செய்யாது ரணில் விக்ரமசிங்கவிற்கு வேலை செய்தனர்.
யாழ்ப்பாணத்தில் சிறிகாந்தா, சிவாஜிலிங்கம் போன்றோரும், வன்னியில் உதயராசா உள்ளிட்டோரும் ரெலோவில் இருந்த விலகி சென்றுள்ளனர். இதற்கெல்லாம் காரணம் ரெலோவின் தலைவரான செல்வம் அடைக்கலநாதனே.
எந்தவொரு அர்ப்பணிப்புமின்றி கட்சியினுடைய அனைத்து வளங்களையும் சுரண்டிக்கொண்டு செல்வம் அடைக்கலநாதன் கட்சியின் தலைவராக இருந்தவர். நாடாளுமன்றக் குழுக்களின் தலைவராக இருந்த போது ஒரு அமைச்சசுப் பதவி போல 22 அலுவலர்களை அவருக்கு கொடுத்தார்கள்.
எங்களுடைய இறந்துபோன போராளிகளுடைய குடும்பங்கள் சாப்பாட்டுக்கு வழியின்றி நிற்கின்றார்கள் அவர்களுக்கு ஒரு பதவி நிலையை கொடுத்தாரா. அவருடைய சொந்தக்காரர்களை அந்தப் பதவிகளுக்கு நியமித்து அந்தப் பணத்தை தங்களுடைய வங்கிக்கே திருப்பி எடுத்தார்.” என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |