இராஜதந்திர அரசியலே சிறந்தது: அடிக்கல் நாட்டு விழாவில் வியாழேந்திரன் தெரிவிப்பு
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் பெற்றுக் கொடுக்க முடியாமல் போன தமிழீழத்தை இனி எந்த கொம்பனாலும் பெற்றுக் கொடுக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்தார்.
இன்றைய தினம் (13) மட்டக்களப்பு செங்கலடி பொதுச் சந்தையில் அமைக்கப்பட உள்ள கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டுவிழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
இராஜதந்திர அரசியல்
"இலங்கையில் மூன்று விதமான அரசியல் இருக்கிறது. ஒன்று எதிர்ப்பு அரசியல் எதற்கு எடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிப்பது அந்த அரசியலை நான் முற்றாக வெறுக்கிறேன்.
எதிர்ப்பு அரசியலுக்கான காலம் 2009 முள்ளிவாய்க்காலுடன் நிறைவுக்கு வந்துவிட்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனால் பெற்றுக் கொடுக்க முடியாமல் போன தமிழீழத்தை இனி எந்தக் கொம்பன் வந்தாலும் பெற்றுக் கொடுக்க முடியாது.
03 தசாப்தங்களாக தமிழர்கள் எதிர்ப்பு அரசியல் செய்து அதனால் ஏற்பட்ட நன்மை தீமைகளை கணக்கிட்டுப் பார்த்தால் தெரியும் தமிழர்களுக்கு கிடைத்த நன்மைகள் என்ன என்று.
இதேவேளை சில கட்சிகள் சரணாகதி அரசியலை மேற்கொள்கின்றன அதனையும் நான் முற்றாக எதிர்க்கிறேன், என்னைப் பொறுத்தவரை தமிழர்களுக்கு தற்போது தேவை இராஜதந்திர அரசியல் அதனையே நான் தற்போது செய்து வருகிறேன்.
உரிமைகளை வென்றெடுக்க வேண்டு
அபிவிருத்தியுடன் கூடிய உரிமைகளுக்கான போராட்டத்தையே எமது அமைப்பு முன்னெடுத்து வருகிறது. தீர்வு கிடைக்கும் வரை காத்திருந்து விட்டு தீர்வு கிடைத்ததற்கு பிறகு தமிழர்களுக்கான அபிவிருத்திகளை செய்யலாம் என்று காத்திருப்போமானால் தீர்வு கிடைத்ததன் பிறகு இந்த நாட்டில் தமிழர்களுக்கு என்று எதுவும் இருக்காத நிலையே ஏற்படும் அவ்வாறு இருக்கும் போது எதனை வைத்துக் கொண்டு அபிவிருத்தி செய்ய முடியும்.
எனவே எல்லாவற்றையும் எதிர்த்துக் கொண்டிருக்காமல் அரசுடன் இணைந்து அபிவிருத்தியுடன் கூடிய உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு." என்றார்.
ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச சபை செயலாளர் பற்குணம் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் மற்றும் செங்கலடி வர்த்தக சங்க நிர்வாகிகள், செங்கலடி கிராம அபிவிருத்தி சங்கம், ஏறாவூர் பற்று பிரதேச செயலக அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |