அநுர அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்! சர்வதேசத்துக்கு ஐ.நா. அழைப்பு
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளும் ஏனைய நாடுகளும் உண்மை மற்றும் நீதியை உறுதிப்படுத்துவதற்காக திசாநாயக்க அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் அழைப்பு விடுத்துள்ளது.
ஜெனிவா மனித உரிமை பேரவை கூட்டமானது இன்று ஆரம்பமான நிலையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் வோல்கர் டர்க் வெளியிட்ட சமீபத்தய அறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், நாட்டின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமை தொடர்பான புதிய அறிக்கையை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் வோல்கர் டர்க் வெளியிட்டுள்ளார்.
கடந்த கால மனித உரிமை மீறல்
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் 2024 செப்டெம்பரில் பதவியேற்றபோது, கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்கப்படும் என உறுதியளித்திருந்தது என்பதையும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

அறிக்கையின்படி, “சில முக்கிய வழக்குகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் காணப்பட்ட போதிலும், 2009ஆம் ஆண்டு முடிவடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின்போது அனைத்து தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச சட்டத்தின் கீழான குற்றங்கள், பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டத்தின் தீவிர மீறல்கள் தொடர்பில் இதுவரை போதுமான அங்கீகாரமோ பொறுப்புக்கூறலோ ஏற்படுத்தப்படவில்லை.
இதேபோன்ற கவலைகளை மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) செப்டெம்பர் 1ஆம் திகதி வெளியிட்ட அறிக்கையிலும் பதிவு செய்துள்ளது.
சில முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் வரையறுக்கப்பட்ட முன்னேற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர், நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டமை மற்றும் ஊடகவியலாளர்கள் இலக்கு வைக்கப்பட்டமை தொடர்பான வழக்குகளில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை என அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த கால மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக சுயாதீன பொது அலுவலகத்தை நிறுவுவதாக அரசாங்கம் வழங்கிய உறுதியும் இதுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை.
அதேபோன்று, பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு அவசியமான சட்ட மற்றும் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களும் மேற்கொள்ளப்படவில்லை.
கடுமையான மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஆதாரங்களை சேகரிப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் நிறுவப்பட்ட Sri Lanka Accountability Project எனப்படும் பொறிமுறையையும் திசாநாயக்க அரசாங்கம் இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை.
அடக்குமுறைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டம்
மனித உரிமை பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைத் துன்புறுத்தவும் கைது செய்யவும் இலங்கை அரசாங்கம் இன்னமும் அடக்குமுறைக்குரிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) பயன்படுத்தி வருவதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் அரச புலனாய்வு அமைப்புகளின் கண்காணிப்பு மற்றும் விசாரணைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை முழுமையாக நீக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் வரை, அதன் பயன்பாட்டை இடைநிறுத்துவதற்கான தற்காலிகத் தடை விதிக்குமாறு ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளரால் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தப்படுகிறது.
நீண்டகாலமாக நிலுவையில் உள்ள சட்ட மற்றும் கட்டமைப்பு ரீதியான சீர்திருத்தங்களை இலங்கை அரசாங்கம் அவசரமாக முன்னெடுக்க வேண்டும்.
அடக்குமுறை சட்டங்களை நீக்குதல், பாதுகாப்புத் துறையில் விரிவான சீர்திருத்தங்களை மேற்கொள்ளுதல் மற்றும் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தல் ஆகியவை அவசியம்.
இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாவிட்டால், குற்றங்களுக்கான தண்டனையின்மை மேலும் வலுப்பெறுவதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான நம்பிக்கையின்மை மேலும் ஆழமடையும் அபாயம் இருக்கின்றது.
சர்வதேச குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதில் இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் முன்னேற்றங்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான உயர் ஆணையாளர் அலுவலகம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
மேலும், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகளும் ஏனைய நாடுகளும் உண்மை மற்றும் நீதியை உறுதிப்படுத்துவதற்காக திசாநாயக்க அரசாங்கம் வழங்கிய உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |