தூக்கம் கலைந்ததால் விடுதி காப்பாளரின் மோசமான செயல் - சிறுவன் வைத்தியசாலையில்
தனது தூக்கம் கலைந்ததால் எரிச்சலடைந்த அனாதை இல்லத்தின்விடுதி காப்பாளர், ஒன்பது வயது சிறுவனின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை தூவியுள்ள அதிர்ச்சிகர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
திவுலப்பிட்டிய, கடவல பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்ட 9 வயது சிறுவனை நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக திவுலப்பிட்டிய காவல்துறையினர் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு இரவில் சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்போது தனது தூக்கத்தை கலைத்ததாக எரிச்சலடைந்த விடுதி காப்பாளர் சிறுவனை குளியலறைக்கு அழைத்துச் சென்று ஆடைகளை களைந்து அவனின் பிறப்புறுப்பில் மிளகாய் பொடியை விசிறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அனாதை இல்லத்தில் சுமார் 25 சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிறுவர் இல்லத்தில் உள்ள சிறுவர்களை விடுதி காப்பாளர் துஷ்பிரயோகம் செய்து துன்புறுத்துவதாக தகவல் கிடைத்துள்ளதால் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக திவுலப்பிட்டி காவல்துறை பரிசோதகர் சுபசிங்க தெரிவித்தார்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் சிறுவர் இல்லத்தில் வசிக்கும் சிறுவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்யுமாறு திவுலபிட்டிய காவல்துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், ஏதேனும் தவறுகள் இடம்பெற்றிருந்தால், சிறுவர் இல்ல காப்பாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடவல பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் இல்லம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கம்பஹா பன்னாரதன நன்னடத்தை அலுவலகத்திற்கு நீதிமன்றம் மேலும் உத்தரவிட்டுள்ளது.
