எரிமலையின் உச்சியில் இலங்கை மக்கள் - வரவிருக்கும் ஆபத்து தொடர்பில் எச்சரிக்கை
கடுமையான நெருக்கடி
அடுத்த மாதத்திற்குள் நாடு கடுமையான நெருக்கடியை நோக்கிச் செல்லும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் எம்.எம்.பி.கே. மாயாதுன்னே தெரிவித்துள்ளார்.
"நாங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அடுத்த மாதத்திற்குள் நாங்கள் நிச்சயமாக பாரிய நெருக்கடியை சந்திக்க உள்ளோம் என்பதே உண்மை. யால பருவத்தில் எங்களின் விவசாய உற்பத்தியை மீளப்பெற முடியும் என்பதில் எமக்கு எந்த உறுதியும் இல்லை” என்று அவர் தெரிவித்தார்.
"இது ஒரு சாதாரண சூழ்நிலையாக இருந்தால், நாங்கள் மற்ற நாடுகளிடம் உதவி கேட்டிருக்கலாம், ஆனால் அதை இப்போது செய்ய முடியாது. பெரும்பாலான நாடுகள் உணவு நெருக்கடியை சந்திக்கவுள்ளன” என்று அவர் கூறினார்.
தவிர்க்க முடியாத நெருக்கடியை எதிர்கொள்வதற்கு அவசரத் திட்டம் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும் என்றும் செயலாளர் வலியுறுத்தினார்
எரிபொருள் இல்லாமல் வீடு திரும்ப வேண்டியிருக்கும்
“எங்கள் கிரெடிட் கார்டுகள் மதிப்பற்றதாக இருக்கும் சூழ்நிலையை நோக்கி நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம். எதிர்காலத்தில் நாங்கள் வரிசையில் நின்று எரிபொருள் இல்லாமல் வீடு திரும்ப வேண்டியிருக்கும்” என்று அவர் கூறினார்.
மேலும், வரவிருக்கும் உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் எந்தப் பயிரை வேண்டுமானாலும் பயிரிட முயற்சிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
“நாம் அனைவரும் அதிகபட்சமாக 10 கிலோ அரிசியை நம் வீடுகளில் வைத்திருக்கலாம், ஆனால் கடைகளில் வாங்க அரிசி கிடைக்காதபோது வெறுங்கையுடன் வீடு திரும்ப வேண்டியிருக்கும். நாங்கள் எரிமலையின் உச்சியில் இருக்கிறோம் என்பதை நீங்கள் இப்போது உணரலாம்” என்று அவர் கூறினார்
