பேரறிவாளன் விடுதலை விவகாரம் - நீதிமன்றம் கொடுத்த உத்தரவு
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் தம்மை விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி நாகேஸ்வர் ராவ், பிஆர் கவாய், பிவி நாக ரத்னா அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ளதாகவும், தம்மை விடுவிக்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் பேரறிவாளன் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது ஆஜரான தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர், மாநில அரசின் அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்று தெரிவித்தார். இந்த விவகாரத்தில் 2018ம் ஆண்டில் இருந்து ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர்கள் இடையே ஆவணங்கள் பரிமாற்றம் நடப்பதால் காலதாமதமாக மனுதாரர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடமுடியாது என்று கூறியுள்ள நீதிபதிகள், ஆளுநர் விரைந்து ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்றும், காலம் தாழ்த்துவது ஏற்புடையதல்ல என்றும் கருத்து தெரிவித்தனர். காலதாமதம் ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்க மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் அவகாசம் கோரினார். இதனை கேட்ட நீதிபதிகள் ஜனவரி மாதத்துக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.