ஒருபோதும் விட்டுக் கொடோம் -உக்ரைன் அதிபர் திடசங்கற்பம்
உக்ரைனின் தலைநகரம் தினசரி ஏவுகணை மற்றும் வான்வழி தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது எனவும், ஆனால், எப்போதும் “விட்டுக்கொடுப்பது குறித்து ஒரு நொடி கூட சிந்திக்கவில்லை,” எனவும் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்தார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் காணொலி வாயிலாக அவர் ஆற்றிய உரையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.தனதுரையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னான மோசமான போரை உக்ரைன் சந்தித்து வருவதாகவும், கடந்த 8 ஆண்டுகளாக ரஷ்யவின் ஆக்கிரமிப்பை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ரஷ்யா என்னுடைய நாட்டை மட்டும் தாக்கவில்லை, “எங்களுடைய நன்மதிப்புகள் மீது மிருகத்தனமான தாக்குதலை நடத்தியிருக்கிறது,” என தெரிவித்தார்.
மேலும், உக்ரைன் வான் பரப்பை விமானம் பறக்கத் தடை என அறிவிப்பது குறித்தும் ஸெலென்ஸ்கி மீண்டும் வலியுறுத்தினார். “இதனை கேட்பது அதிகப்படியானதா?” என அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், இந்த போரில் இதுவரையிலான அமெரிக்க ஆதரவுக்கு உக்ரைன் அதிபர் அமெரிக்காவுக்கு நன்றி தெரிவித்தார். இந்த போரில் உதவியது மற்றும் துணைநின்றமைக்காக, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் “தனிப்பட்ட ஈடுபாடு” குறித்தும் ஸெலென்ஸ்கி சுட்டிக்காட்டினார்.
ஆனால், இதுகுறித்து அமெரிக்க நாடாளுமன்றம் பல விஷயங்களை செய்ய வேண்டும் எனவும், “ரஷ்ய இராணுவம் தாக்குதலை நிறுத்தும்வரை” அந்நாட்டுக்கு எதிராக பல தடைகளை விதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
ரஷ்யாவில் உள்ள அனைத்து அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் தடை விதிக்க வேண்டும் என ஸெலென்ஸ்கி பரிந்துரைத்தார்.
“ரஷ்ய சந்தையிலிருந்து அனைத்து அமெரிக்க நிறுவனங்களும் உடனடியாக வெளியேற வேண்டும். ஏனெனில், அதில் எங்களின் இரத்தக்கறை படிந்துள்ளது” என ஸெலென்ஸ்கி கூறினார்.
