நலன்புரி உதவித்திட்டத்தில் முறைகேடு - தமிழர் பகுதியில் கிளம்பியுள்ள மக்கள் எதிர்ப்பு
வவுனியா தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவில் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவு தெரிவில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இரு நேரம் மட்டும் உணவு உண்டு வாழும் குடும்பங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் நேற்று (24) கண்ணீர் மல்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அரசாங்கத்தினால் நலன்புரி உதவித்திட்ட கொடுப்பனவுகள் வழங்குவதற்கான பெயர்ப்பட்டியல் அண்மையில் வெளிவந்திருந்த நிலையில் வவுனியா தோணிக்கல் கிராம சேவையாளர் பிரிவில் வசிக்கும் இரு நேரம் உணவு உண்டு வாழும் குடும்பங்கள், விசேட தேவைக்குட்பட்டவர்கள், முதியோர்கள், விதவைகள் உட்பட்ட வறுமைக்கோட்டிற்கு உட்பட்டவர்களின் பல பெயர்கள் உள்வாங்கப்படாமல் வெளிநாடுகளில் இருப்போர் மற்றும் வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளதாக பாதிக்கப்பட்ட கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
உள்வாங்கப்படவில்லை
போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“எமது கிராமத்திலுள்ள பாதிக்கப்பட்டவர்களில் 70 சதவீதமானவர்களின் பெயர்கள் உள்வாங்கப்படவில்லை.
மேலும் வெளிநாடுகளில் இருப்போர், வசதியானவர்களுக்கே கொடுப்பனவுகளின் பெயர் பட்டியல் வந்துள்ளன.
இதனைக் கேட்கச் சென்றால் கிராம சேவையாளர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் அசட்டைத்தனமாக பதிலளிப்பதுடன் எமது நியாயமான கோரிக்கைகளையும் செவிமடுப்பதில்லை.
மேலும் அபிவிருத்தி உத்தியோகத்தர் பெரியவர்கள், முதியவர்கள் எனப் பாராது மரியாதை இன்மையாகவும் கதைக்கின்றார்.
எமது கிராமத்தில் உண்மையில் கஷ்டப்படுவர்களுக்கு எவ்வித உதவிகளும் கிடைப்பதில்லை” என்றனர்.





