வறட்சியான காலநிலை -சிறுவர்களுக்கு பேராபத்து
தற்போதைய கடும் வறட்சியான காலநிலை மற்றும் தூசு காரணமாக சிறுவர்களுக்கு மூச்சுத்திணறல் மற்றும் வயிற்றுப்போக்கு அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர்களுக்கான வைத்தியசாலையின் குழந்தை நல வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா எச்சரித்துள்ளார்.
மூச்சுத்திணறல் உள்ள சிறுவர்களுக்கு பகல், இரவு மற்றும் அதிகாலை வேளைகளில் இருமல் ஏற்படுவதோடு மூச்சு விடுவதில் சிரமமும் ஏற்படும் என்று அவர் கூறினார்.
வைத்தியசாலைக்கு அழைத்து வாருங்கள்

இவ்வாறான நிலைமைகளுக்கு வைத்தியசாலையில் சிகிச்சைகள் கிடைக்கப்பெறுவதால், பிள்ளைகளுக்கு இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் எவ்வித அச்சமும் இன்றி வைத்தியசாலைக்கு அழைத்து வருமாறு பெற்றோர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும், முதல் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும், அத்தகைய குழந்தைகள் வீட்டில் இருந்தால் புகைபிடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.
ஈக்களால் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு

முக்கியமாக அசுத்தமான உணவு, நீர் மற்றும் வறண்ட காலநிலையால் ஈக்கள் அதிகரிப்பதன் காரணமாக குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு அதிகரித்து வருவதாக டொக்டர் பெரேரா கூறினார்.
வயிற்றுப்போக்கு உள்ள குழந்தைகளுக்கு காய்ச்சல், வாந்தி, சோர்வு மற்றும் வயிற்று வலி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தலாம் என்றும், நீரிழப்பைத் தவிர்க்க அவர்களுக்கு இயற்கையான திரவங்களை வழங்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
பப்பாப்பழம் கொடுக்காதீர்

"அவர்களுக்கு ஒரேஞ், எலுமிச்சை பானம், ஜீவனி திரவம், வாழைப்பழம் மற்றும் வறுக்கப்பட்ட பாண் மற்றும் யோகட் கூட கொடுக்கப்படலாம், ஆனால் பட்டர், எண்ணெய் உணவுகள், பப்பாளி மற்றும் இலை காய்கறிகளை வழங்குவதைத் தவிர்க்கவேண்டுமெனவும்," அவர் தெரிவித்துள்ளார்.