பிளவுபடும் தொண்டமானின் தாய்க் கட்சி : கிளம்பியுள்ள சர்ச்சை!
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமான், குறித்த கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருவதாகவும் இதற்காக கட்சியின் தேசிய சபையைக் கூட்டுமாறு கட்சியின் தலைவர்களுக்கு அறிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும், ஜீவன் தொண்டமான் இவ்விடயம் தொடர்பில் எந்தவொரு உத்தியோகபூர்வ அறிவிப்பையும் இதுவரையில் வெளியிடவில்லை.
இந்நிலையில், ஐ.பி.சி தமிழ் ஊடகமானது அக்கட்சியின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, இவ்விடயத்தில் எந்தவித உண்மைத் தன்மையும் இல்லை என அவர் உறுதிப்படுத்தினார்.
பட்ஜெட் முன்மொழிவு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸுக்குத் தலைமை பதவியை வகிக்கும் அக்கரபத்தனை பிரதேச சபையின் 2026 ஆம் ஆண்டுக்காக பட்ஜெட் முன்மொழிவு தோற்கடிக்கப்பட்டதையடுத்து, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தற்போதைய தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் கட்சியின் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையே தொலைபேசி மூலம் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்தது.

குறித்த வாக்குவாதத்தின் விளைவாக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் பதவியில் இருந்து ஜீவன் தொண்டமான் விலக தீர்மானித்துள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூத்த பிரதித் தலைவர் ஒருவரை மேற்கோள்காட்டி தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டிருந்தது.
தலவாக்கலை லிதுல, நுவரெலியா நகராட்சி மன்றம், ஹகுரன்கெத்த, வலப்பனை மற்றும் கொத்மலை ஆகிய உள்ளூராட்சி நிறுவனங்களில் உள்ள இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கவுன்சிலர்களுக்கு அரசாங்கத்திற்கு வழங்கும் ஆதரவிலிருந்து விலகுவதற்கான கடிதங்களை வழங்குமாறு, கட்சியின் பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
எனினும், இவ்வாறு பரவி வரும் செய்திகளில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை எனவும், இது ஒரு உத்தியோகபூர்வமற்ற செய்தி எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர் கணபதி கனகராஜ் மேலும் எங்களுடைய ஊடகத்துக்கு தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அங்கீகரிக்கப்படாத தேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட இராஜதந்திரி
4 நாட்கள் முன்