வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி! பெண்ணொருவர் அதிரடி கைது
தென் கொரியா, இத்தாலி மற்றும் நியூசிலாந்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி பணமோசடியில் ஈடுபட்ட ஒரு பெண்ணை கம்பஹா பகுதியில் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபரான பெண் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஆண்களுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றி 5 மில்லியன் ரூபாய் பெற்றுள்ளார்.
இருப்பினும், அந்த பெண் வாக்குறுதியளித்தபடி வேலைகளை வழங்கவில்லை என்று சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
கைது நடவடிக்கை
அதன்படி, சந்தேக நபரைக் கைது செய்ய அதிகாரிகள் அவரது வீட்டிற்குச் சென்ற போதிலும், அவர் அங்கிருந்து தலைமறைவாகியிருந்து வந்துள்ளார்.

அதனைதொடர்ந்து, நேற்று (06) கம்பஹா பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் இஸ்ரேலிய வேலைகளுக்கான ஆட்சேர்ப்புக்கான நேர்காணலை அந்தப் பெண் நடத்தி வருவதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில், அந்த இடத்திற்குச் சென்ற அதிகாரிகள் செல்லுபடியாகும் அனுமதியின்றி வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான ஆட்சேர்ப்பு மற்றும் பணம் வசூலித்த குற்றச்சாட்டின் பேரில் அவரைக் கைது செய்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண் கொட்டாவை - பன்னிப்பிட்டிய பகுதியில் வசிப்பவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
முன்னதாகவே பிணை
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக அவர் முன்னர் பணியகத்தின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு கடுவெல நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டதாகவும் அங்கு அவருக்கு பிணை வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இதேவேளை, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி தொடர்பாக அவருக்கு எதிராக வேறு காவல் நிலையங்களிலும் முறைப்பாடு இருப்பதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |