எப்ஸ்டீனின் சர்ச்சைக்குரிய கோப்புகள்! பகிரங்கமாக மன்னிப்புக் கோரிய பிரித்தானிய பிரதமர்
அமெரிக்க நீதித்துறை, ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான சுமார் 30 லட்சம் பக்க ஆவணங்கள், 2,000-க்கும் மேற்பட்ட காணொளிகள் மற்றும் 1.8 லட்சம் புகைப்படங்களை ஜனவரி 31 அன்று பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளது.
இந்த ஆவணங்களில் உலகளவில் பெரும் செல்வாக்கு கொண்ட பல முக்கிய நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்னர் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட எப்ஸ்டீன் ஆவணங்களில், அமெரிக்காவுக்கான பிரிட்டனின் முன்னாள் தூதர் பீட்டர் மண்டேல்சனின் பெயரும் இடம் பெற்றிருந்தது.
புதிய எப்ஸ்டீன் கோப்பு
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஆண்டு செப்டம்பரில் அவரை தூதுவர் பதவியிலிருந்து நீக்குமாறு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உத்தரவிட்டார்.

தற்போது வெளியாகியுள்ள புதிய எப்ஸ்டீன் கோப்புகளில், பீட்டர் மண்டேல்சனுடன் தொடர்புடைய புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. அதில், ஒரு பெண்ணுடன் அவர் அரை நிர்வாண நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த ஆதாரங்கள் மூலம், எப்ஸ்டீனுடன் பீட்டர் மண்டேல்சன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக சந்தேகங்கள் மேலும் வலுப்பெற்றுள்ளன.
அரசியல் அழுத்தம்
இதன் காரணமாக, அவருக்கு பதவி வழங்கிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் பொறுப்பேற்க வேண்டும் என்றும், அவர் பதவி விலக வேண்டும் என்றும் அரசியல் வட்டாரங்களில் எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

புதிய எப்ஸ்டீன் ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, ஸ்டார்மர் தலைமையிலான அரசு கடும் அரசியல் அழுத்தங்களை எதிர்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பீட்டர் மண்டேல்சனின் பொய்களை உண்மையாக நம்பியே அவருக்கு பதவி வழங்கியதாகவும், எப்ஸ்டீன் விவகாரத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கோருவதாகவும் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் இன்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |