வெளிப்படைத்தன்மை இருந்தால் வெற்றிப்பெறலாம் - அழைப்பு விடுத்த உலக வங்கி
இலங்கையில் சீர்திருத்தங்கள் வெற்றிபெற வேண்டுமாயின் அதிகரித்த வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும் என உலக வங்கி அழைப்பு விடுத்துள்ளது.
உலக வங்கியின் தெற்காசியாவிற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர், நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுடன் வொஷிங்டனில் சந்திப்பொன்றை மேற்கொண்டுள்ளார்.
இந்தக் கூட்டத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவும் கலந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பு தொடர்பில் தமது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ள மார்ட்டின் ரைசர், இலங்கையின் நிதி மற்றும் பொருளாதார நிர்வாக சீர்திருத்தங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ளார்.
மீட்சியை பெறுவதற்கான முயற்சிகள்

முழுமையான மீட்சியை பெறுவதற்கான முயற்சிகள் அதிகரிக்கப்பட வேண்டும் எனவும் உலக வங்கி, யோசனைகள் மற்றும் நிதியுதவியுடன் அதனை ஆதரிக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட முக்கியமான சமூகப் பாதுகாப்பு சீர்திருத்தம் உட்பட, சீர்திருத்த நடவடிக்கைகள் வெற்றிபெறுவதற்கு அதிகரித்த வெளிப்படைத்தன்மை முக்கியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சி, ஏற்றுமதி சார்ந்த சிறு மற்றும் நடுத்தர வணிகங்களை ஆதரிப்பது என்பன குறித்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டதாக உலக வங்கியின் தெற்காசியாவிற்கான துணைத் தலைவர் மார்ட்டின் ரைசர் தெரிவித்துள்ளார்.