விடுதலையான பின் மௌனம் கலைத்தார் தனுஷ்க குணதிலக (காணொளி)
புதிய இணைப்பு
அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் இன்று விடுதலை செய்தது.
இதனை தொடர்ந்து நீதிமன்ற வளாகத்தில் இருந்து வெளியே வந்த தனுஷ்க குணதிலக இன்று ஊடகங்களுக்கு தனது கருத்து வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் தெரிவித்ததாவது,
"நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை. நீதிபதியின் தீர்ப்பில் எல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது என்று நினைக்கிறேன். இந்த இக்கட்டான நேரத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 11 மாதங்கள் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. குறிப்பாக இன்று எனது சட்டத்தரணி முருகன் தங்கராஜ் இங்கு இல்லாவிட்டாலும் அவருக்கும் மற்ற வழக்கறிஞர்களுக்கும் மிக்க நன்றி.
எனது மேலாளர் எலீன் மற்றும் எனது பெற்றோர்கள் மற்றும் இலங்கையில் உள்ள சிலர் அனைவரும் என்னை நம்பினார்கள். அது எனக்கு நிறைய தைரியத்தை கொடுத்தது. அதனால் இறுதியில் நீதிபதி சரியான முடிவை எடுத்தார்.
நான் சொன்னது போல் அந்த முடிவு எல்லாவற்றையும் சொல்கிறது. எனது வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பியதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்றார்.
அதேவேளை, மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆர்வமாக உள்ளதாகவும் அதுவரை காத்திருக்க முடியாதெனவும் தெரிவித்துள்ளார்.
Sri Lanka Cricketer Danushka Gunathilaka has been found not guilty of the sexual assault of a Tinder date through the act of "stealthing" in Australia. @danushka_70 ? pic.twitter.com/qwchvSLlo6
— Nibraz Ramzan (@nibraz88cricket) September 28, 2023
முதலாம் இணைப்பு
அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக குற்றமற்றவர் என நிவ் சௌத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அவுஸ்திரேலியாவில், பெண் ஒருவரை பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே இந்த தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சாட்சி கோரல்கள் மற்றும் எழுத்துமூல சமர்ப்பனங்கள் கடந்த 4 நாட்களாக நீதிமன்றில் முன்வைக்கப்பட்ட நிலையில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது.
விடுதலை செய்து தீர்ப்பளிப்பு
2022 ஆம் ஆண்டும் நவம்பர் மாதம் 29 வயதுடைய பெண் ஒருவரை தனுஷ்க குணதிலக சிட்னியில் சந்தித்துள்ளார். இதனையடுத்து அவர் குறித்த பெண்ணை பாலியல் வன்புணர்விற்காக உட்படுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாட்டுக்கமைய தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிராக அவுஸ்ரேலிய அரச சட்டத்தரணி ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இதன் அடிப்படையில் தனுஷ்க குணதிலக கடந்த நவம்பர் 6 ஆம் திகதி அதிகாலை சிட்னியில் கைதானார்.
இந்தநிலையில், கடந்த 21 ஆம் திகதி சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் தனுஷ்கவின் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று (28) அதன் தீர்ப்பை அறிவித்த நீதிமன்றம் தனுஷ்க குணதிலக்கவை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.