உலக கிண்ண தகுதிச் சுற்று -மேற்கிந்திய தீவுகளின் கனவை தகர்த்தது நெதர்லாந்து
ஒருநாள் உலகக்கோப்பைக்கான தகுதிச்சுற்று போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி பெற்றுக்கொண்ட 374 ஓட்டங்களை வெற்றிகரமாக துரத்தி, வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது நெதர்லாந்து அணி.
2023 ஒருநாள் உலகக்கிண்ண தொடர் வரும் நவம்பர் மாதம் தொடங்கி நடைபெற உள்ள நிலையில், அதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் சிம்பாப்வேவில் நடைபெற்றுவருகின்றன. தகுதிச்சுற்றுக்கான மோதலில் 10 அணிகள் விளையாடிய நிலையில், தற்போது அடுத்த கட்டத்திற்கு 6 அணிகள் முன்னேறியுள்ளன.
வரலாற்றில் மறக்கமுடியாத போட்டி
Alzarri Joseph gets a wicket off the last ball when Netherlands ?? needed 1 run to complete one of the most EPIC chases in ODI history.
— Vibhor (@dhotedhulwate) June 26, 2023
On to the super over now. Game of fine margins this.#NEDvsWI #WIvsNED #ICCWorldCupQualifier pic.twitter.com/lVlsI9z8BX
இந்நிலையில் இன்று நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் மற்றும் நெதர்லாந்து அணிகளுக்கு இடையேயான போட்டி, ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு போட்டியாக அமைந்துள்ளது.
கடந்த போட்டியில் சிம்பாப்வே அணிக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் அணி படுதோல்வியை சந்தித்த நிலையில், உலககிண்ணத்திற்கான தகுதி சுற்றில் நிலைத்திருக்க இனிவரும் அனைத்து போட்டிகளிலும் வெல்லவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டது.
இந்நிலையில், இன்று தொடங்கிய நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. முன்வரிசை வீரர்கள் அனைவரும் சிறப்பாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுக்க, மத்திய தரவரிசையில் வந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தினார். 9 பவுண்டரிகள் 6 சிக்சர்கள் என வானவேடிக்கை காட்டிய பூரன் 65 பந்துகளில் 104 ஓட்டங்கள் குவித்து அசத்தினார்.
இறுதியில் கைகோர்த்த கீமோ பவுல்லும் 4 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என துவம்சம் செய்ய 50 ஓவர் முடிவில் 374 ஓட்டங்கள் என்ற வலுவான எண்ணிக்கையை எட்டியது மேற்கிந்திய தீவுகள் அணி.
கடினமான இலக்கை நோக்கி
SUPER OVER in West Indies vs Netherlands!
— ESPNcricinfo (@ESPNcricinfo) June 26, 2023
What is this match ?#CWC23 #WIvNED pic.twitter.com/VXBtlTg2uA
375 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணியின் தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். 76 ஓட்டத்தில் முதல் விக்கெட்டை வீழ்த்திய மேற்கிந்திய தீவுகள் அணி, அடுத்தடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தியது.
30 ஓவரில் 170 ஓட்டத்திற்கு 4 விக்கெட்டை இழந்த நெதர்லாந்து அணிக்கு தேவையான ஓட்டசராசரி 10-ஐ தாண்டி சென்றது. இந்நிலையில் மேற்கிந்திய தீவுகள் அணி தான் எளிதாக வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் 5ஆவது விக்கெட்டுக்கு கைகோர்த்த தேஜா நிடமானுரு மற்றும் அணித்தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் இருவரும் போராடினர். 40 ஓவரில் 267 ஓட்டங்களை எட்டியிருந்த நெதர்லாந்து அணி வெற்றி பெற, கடைசி 10 ஓவரில் ஒவ்வொரு ஓவருக்கும் 11 ஓட்டங்கள் அடிக்கவேண்டியிருந்தது. முக்கியமான நேரத்தில் அதிரடிக்கு திரும்பிய தேஜா அடுத்த ஓவர்களில் 16, 17 ஓட்டங்கள் அடித்து விறுவிறுவென ஓட்டங்களை எடுத்துவந்தார். இறுதிவரை களத்தில் நின்ற தேஜா நிடமானுரு சதமடித்து அசத்த கடைசி 5 ஓவரில் 53 ஓட்டங்கள் தேவை என போட்டி மாறியது.
இந்நிலையில் 46ஆவது ஓவரை வீச வந்த ஹோல்டர் நிடமானுரு உட்பட 2 விக்கெட்டுகளை வீழ்த்தி போட்டியை மேற்கிந்திய தீவுகள் அணி பக்கம் திருப்பினார். அவ்வளவுதான் மேற்கிந்திய தீவுகள் வென்று விடும் என்று நினைத்த போது, கடைசியாக களத்திற்கு வந்த வான் பீக் அதிரடியான துடுப்பாட்டத்தை ஆடினார்.
கடைசி 2 ஓவருக்கு 30 ஓட்டங்கள் தேவை என்ற இடத்தில், 3 பவுண்டரிகள், 1 சிக்சர் என பறக்கவிட்ட வான் பீக் 21 ஓட்டங்கள் அடித்தார். கடைசி 1 ஓவருக்கு 9 ஓட்டங்கள் தேவையான இடத்தில், முதல் பந்தை வான் பீக் பவுண்டரி அடித்தாலும் கடைசி 5 பந்தில் 2 விக்கெட்டை வீழ்த்திய அல்சாரி ஜோசப் போட்டியை சமனாக மாற்றினார்.
சூப்பர் ஓவரில் ஜொலித்த வான் பீக்
Crazy SUPER OVER between Netherlands and West Indies
— . (@MSD_071113_) June 26, 2023
Netherlands - 4,6,4,6,6,4
West Indies - 6,1,1,W,W
NED won the Super over by 22 runs
Logan Van Beek , The hero of the Match ???pic.twitter.com/aLDezsBdjw
பின்னர் போட்டி சூப்பர் ஓவருக்கு மாறியது. சூப்பர் ஓவரில் கடைசியில் துடுப்பாட்டம் செய்த வான் பீக் துடுப்பாட்டத்தை தொடர்ந்தார். மேற்கிந்திய தீவுகள் அணிக்கு ஒரே ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்தி போட்டியில் திருப்பு முனை ஏற்படுத்திய ஹோல்டர் பந்துவீசினார். எல்லாம் சரியாக வரும் என்று எதிர்பார்த்த மேற்கிந்திய தீவுகள் அணிக்கு தண்ணி காட்டினார் வான் பீக். எதிர்கொண்ட 6 பந்துகளையும் 4-6-4-6-6-4 என பவுண்டரி, சிக்சர்களாக வானவேடிக்கை காட்டிய அவர் 30 ஓட்டங்களை அடித்து அசத்தினார்.
31 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி ஏதாவது செய்யுமா என்று எதிர்பார்த்த போது முதல் பந்தையே சிக்சருக்கு அனுப்பிய சார்லஸ் நம்பிக்கை அளித்தார். ஆனால் துடுப்பாட்டத்தில் மட்டுமல்ல பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட வான் பீக், அடுத்த 2 பந்தில் 2 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார். கடைசி 3 பந்துக்கு 23 ஓட்டங்கள் என போட்டி மாறிய போது, அடுத்தடுத்து 2 பந்துகளில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய வான் பீக் வரலாற்று வெற்றியை நெதர்லாந்து அணிக்கு தேடித்தந்தார்.
உலகக்கோப்பைக்கு தகுதிபெறவேண்டும் என்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கனவை தகர்த்துள்ளது நெதர்லாந்து அணி.
