தமிழ் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்த உலக தமிழர் பேரவையினர்! (காணொளி)
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள உலக தமிழர் பேரவையினரின் செயற்பாடுகள் தொடர்பாக தாயகப் பகுதிகளில் இருந்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களை அந்த குழுவினர் சந்தித்துள்ளனர்.
உலக தமிழர் பேரவையினருக்கும் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது.
இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், இரா.சாணக்கியன் ஆகியோருடன் ரவூப் ஹக்கீம், அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டவர்களும் பங்கேற்றிருந்தனர்.
பௌத்த தேரர்களின் பங்கேற்பு
இவர்களை தவிர பௌத்த மதத்தின் நான்கு முக்கிய உயர் பீடங்களை பிரதிநிதித்துவப்படுத்தியும் பௌத்த தேரர்கள் இந்த சந்திப்பில் பங்கெடுத்துள்ளனர்.
அத்துடன், தமிழ் தேசிய மக்கள் முன்னணி மாத்திரமல்லாமல், புலம்பெயர்ந்த தமிழ் அமைப்புகளும் உலக தமிழர் பேரவையை புறக்கணித்துள்ளமை தொடர்பாக இந்த சந்திப்பின் போது பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் பதில் அளித்துள்ளார்.
மேலும், ஒற்றையாட்சிக்கு உட்படாமல் அதிகாரங்களை பகிர்வது மற்றும் பொறுப்புகூறலை உள்ளடக்கிய இமாலய பிரகடனத்தின் அடிப்படையில் தேசிய கலந்துரையாடலை மேற்கொள்வதற்கான முன்மொழிவை உலக தமிழர் பேரவையினர் முன்மொழிந்துள்ளதாக இந்தக் சந்திப்பில் பங்கேற்ற எம்.ஏ.சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |