யாழ் கானத்தை இசைத்தது யார்!
கடந்த 21 ஆம் திகதி யாழ்ப்பாணம் மிகப் பிரம்மாண்டமானதொரு சனத் திரட்சியைக் காட்டியிருந்தது.
போர் முடிவுற்ற பிறகு யாழ்ப்பாணத்து மக்கள் முதன்முறையாக – சுயமாக ஓரிடத்தில் திரண்ட நிகழ்வு அது.
தமிழ் சினிமா நடிகர் சித்தார்த், தமிழக இசைக் கலைஞர் சந்தோஸ் நாராயணன், நடனக் கலைஞர் கலா மாஸ்ரர் உள்ளிட்ட பல கலைஞர்கள் முற்றவெளி கலையரங்கில் நடத்திய “யாழ்கானம்” என்கிற இலவச இசை நிகழ்ச்சியில் 5000 தொடக்கம் 7000 பேர் வரையிலானவர்கள் கலந்துகொண்டனர்.
வழமையாக இதுபோன்ற இசை நிகழ்ச்சிகள் பெருமெடுப்பான விளம்பரப்படுத்தல்களுடன் அரங்கேறும்.
நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் பிரபலமாவார்கள். தமிழகத்திலிருந்து முன்னணி கலைஞர்கள் அழைத்துவரப்படுவதால், அவர்களுக்கான ஊதியம், ஏற்பாட்டுக்கான செலவுகள் என அனைத்தும் பார்வையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும்.
முடிவுக்கு வராத சர்ச்சைகள்
ஆனால் இம்முறை இடம்பெற்ற இந்த நிகழ்வுக்கு இவை பற்றிய பேச்சுக்கள் எவையுமே வெளிவரவில்லை.
ஏற்பாட்டாளர்கள் யார், இந்த இசை நிகழ்ச்சியை இப்போது ஏன் நடத்தினார்கள், இதன் நோக்கம் என்ன, இதற்கான செலவுகளை யார் பொறுப்பெடுத்தார்கள் ஆகிய அனைத்துக் கேள்விகளுக்குமான பதில்களும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தன.
மிகத்துரிதமாக 1000 இற்கும் மேற்பட்ட – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெரும்புள்ளிகளின் பங்கேற்புடன் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்தது.
ஆனால் இந்த இசை நிகழ்ச்சியைத் தொடரும் சர்ச்சைகள் இன்னமும் முடிவுக்கு வரவில்லை.
இந்திய ஊடகத்தின் செய்தி
தமிழகத்திலிருந்து வெளியாகும் இந்திய இணைய ஊடகங்கள் இந்த இசை நிகழ்ச்சி குறித்த செய்தியைப் பின்வருமாறு தருகின்றன.
“கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியை இந்திய புலனாய்வு அமைப்புகள் ஆழமாக அவதானித்து வந்தன.
இந்த இசை நிகழ்ச்சியின் ஒழுங்கமைப்பாளராக செயற்பட்ட கொழும்பைச் சேர்ந்த அருண் செல்வராஜ் 2014 ஆம் ஆண்டு சென்னையில் வைத்து, பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் இந்திய தேசிய புலனாய்வு முகவரகத்தால் கைதுசெய்யப்பட்டவராவார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு தமீம் அன்சாரி என்பவர், தமிழ்நாட்டின் திருச்சியில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார்.
கொழும்பு பயணிப்பதற்காக திருச்சி விமான நிலையத்துக்கு அவர் வருகைதந்தபோது, தமிழ்நாட்டு கியூ பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.
இவரைக் கைதுசெய்தபோது இரண்டு டி.வி.டிக்களை வைத்திருந்தார். குறித்த டி.வி.டிக்களில் இந்தியாவின் கிழக்கு கடற்படை முகாம் பற்றிய தகவல்கள், சூலூர் விமானத் தளம் பற்றிய தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாக இந்திய புலனாய்வுத்துறை தெரிவித்திருந்தது.
தமீம் அன்சாரியின் கைதினைத் தொடர்ந்து, சிவகாமிநாதன் சரவணமுத்து என்கிற போலி கடவுச்சீட்டினைப் பயன்படுத்தி சென்னையில் குடியேற முயற்சித்ததாகவும், தென்னிந்தியாவின் பாதுகாப்பு மூலோபாயங்களைக் உளவுபார்க்க முயன்றதாகவும் தெரிவித்து அருண் செல்வராஜ் கைதுசெய்யப்பட்டார்.
இவர் பாகிஸ்தானின் வெளியகப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளுடனும் அருண் செல்வராஜ் தொடர்புபட்டிருந்தார் என்பதையும் இந்திய புலனாய்வுத் துறை வெளிப்படுத்தியிருந்தது.
இந்திய தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய குற்றச்சாட்டுக்களின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட இவர், பின்னர் சொந்த நாடான இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டார்.
ஆயினும் அதன் பின்னர் இவர் பாகிஸ்தான் உள்ளிட்ட வேறு பல புலனாய்வு வலைப்பின்னல்களுடனும் இணைந்து செயற்படலாம்” என இந்திய புலனாய்வுத்துறையை மேற்கோள்காட்டி அந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்தச் செய்தி உண்மையாக இருக்குமா?
உண்மை இல்லை என்று கூறிவிட முடியாதளவுக்கு, இந்திய புலனாய்வுத்துறை இலங்கை தொடர்பில் கடந்த காலங்களில் வெளியிட்டுள்ள செய்திகள் இருந்திருக்கின்றன.
குறிப்பாக, 2019 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் இந்திய புலனாய்வு முகவரகம் முன்கூட்டியே எச்சரிக்கையை விடுத்திருந்தமையைக் குறிப்பிடலாம்.
இலங்கையைவிட மிக மோசமான பொருளாதார நெருக்கடியை சந்தித்திருக்கும் பாகிஸ்தானுக்குப் பக்கதுணையாக சீனா நிற்கிறது.
சீனாவிடம் கடன் வாங்கி மாண்டுபோன நாடுகளின் பட்டியலிலும் பாகிஸ்தான் முன்னணியிலும் இருக்கின்றது.
பாகிஸ்தானைப் போலவே இலங்கையையும் தனது கட்டுக்குள் வைத்திருக்க சீனா தொடர்ச்சியாக முயன்றுவருகின்றது.
அதற்காக இலங்கையின் தென்பாகத்தில் முன்னெடுக்கப்படும் பல வேலைத்திட்டங்கள் அந்நாட்டுக்கு வெற்றியளித்துள்ளன.
ஆனால் யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடமாகாணம் சீனாவின் ஆதிக்கத்திற்குப் பெரும் சவாலாகவே இருந்துவருகின்றது.
அதற்குப் பிரதான காரணமே இந்தியாதான். யாழ்ப்பாணத்தை கலாசார ரீதியாக இந்தியாவுடன் இணைக்கும் வேலைத்திட்டங்களின் வெற்றிபெற்றிருக்கும் இந்தியா, மென்மேலும் தன் ஆதிக்கத்தை இப்பிராந்தியத்தில் ஆழப்படுத்திக்கொண்டிருக்கின்றது.
எனவே இதற்கெல்லாம் போட்டியாக சீனாவும் களமிறங்கவேண்டிய தேவையிருக்கின்றது. ஏனெனில் சீனாவின் மொத்த நகர்வுமே, ஒட்டுமொத்த இலங்கையையும் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கானதாகவே இருக்கின்றது.
ஏனெனில் இலங்கைத் தீவின் வெளியில் நின்று இதன் பூகோள அரசியலைக் கணிக்கும்போது கொழும்பு முக்கியமானதாகப்படினும், இலங்கைக்கு உள்ளே இருந்து பார்த்தால், இத்தீவைப் பூகோள ரீதியாகக் கட்டுப்படுத்தக்கூடிய மையம் மன்னார் தொடக்கம் திருகோணமலை வரையான பிராந்தியத்தில் இருப்பதை உணரலாம்.
இந்தியாவினால் இயலாத காரியம்
இந்தியா யாழ்ப்பாணத்திற்குள் ஆழமாக கால்பதித்திருப்பினும், இதுவரை 1000 பேரைக்கூட ஓரிடத்தில் திரட்டி நிகழ்வொன்றைக் காண்பிக்க முடியவில்லை.
இந்திய உதவித்திட்டங்கள், இந்திய குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, இந்துமயமாக்க செயற்பாடுகள், அதற்கான வலைப்பின்னல் உருவாக்கங்கள், இந்தியா கலாசார மண்டப அமைப்பு, அதில் இடம்பெறும் இந்திய கலாசார நிகழ்வுகள் என யாழ்ப்பாண மக்களைத் தன்னை நோக்கி ஈர்ப்பதற்காக இந்திய தூதரகம் ஊடாக இந்தியா செய்யும் அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் இங்கிருந்து நூற்றுக்கணக்கானவர்கள் மாத்திரமே எடுபடுகின்றனர்.
அதுவும் இந்தியாவிடமிருந்து பொருளாதார, கல்வி நலன்களை எதிர்பார்க்கும் புலமைசார் தரப்பினர் மாத்திரமே இந்நிகழ்வுகளுக்கு செங்கம்பளம் விரித்துக்காத்துக்கிடக்கின்றனர்.
இதனைத் தாண்டி, தமிழ் வெகுசனங்களை இந்தியாவினால் திரட்ட முடியவில்லை. கவர முடியவில்லை.
ஆகவே இந்தியாவினால் இயலாத இந்தக் காரியத்தை, இப்பிராந்தியத்தில் இந்தியாவுக்குப் போட்டியாக நிற்கக்கூடிய தரப்புக்கள்– நாடுகள் கையிலெடுத்திருக்க வாய்ப்புண்டு.
அதற்காகவே “யாழ் கானம்” மீட்டப்பட்டிருக்கின்றது என்பதே இந்திய ஊடகங்கள் தந்திருக்கும் செய்தியிலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய தகவல்.
அரசியல் புரிதலற்ற மக்கள்கூட்டத்தைக் கவர்ந்துசெல்ல வெறும் “அக்காமாலா”வே போதும் என்பதைச் சொல்ல வைகைப்புயல்தான் வரவேண்டும் என்றில்லை. யாழ்ப்பாணமும் சொல்லாம் என்பதே இந்நிகழ்வு.
யாழ் கானத்திற்குப் பின்னால் இந்தியா இருக்குமா?
இந்தியா, யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யும் அத்தனை நிகழ்வுகளிலும் தன்னை முதன்மைப்படுத்தத் தயங்குவதில்லை.
அண்மையில்கூட தன் பின்னணி தெளிவாகத் தெரியவில்லை என்பதற்காக, இராமேஸ்வரம் – காங்கேசன்துறை கப்பல் பயணச் சேவைக்கு இரண்டு தடவைகள் திறப்பு விழாக்கள் நடத்தப்பட்டன.
அதேபோல பல வருடங்களாக யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்ட இந்திய கலாசார மண்டபம் மூன்று தடவைகள் திறப்புவிழா கண்டன.
அதனைவிட யாழ்ப்பாணத்தில் இந்திய பின்னணியில் இடம்பெறும் அனைத்து நிகழ்வுகளிலும், ஒரு கொடியைப் பறக்கவிட்டாவது தன் இருப்பை வெளிப்படுத்தும் நாடாக இந்தியா இருக்கின்றது.
நிலமை இப்படியிருக்க, ஐயாயிரத்துக்கு மேற்பட்ட மக்களை ஓரிடத்தில் திரட்டிய இவ்விசை நிகழ்ச்சியில் தனது பின்னணியை வெளிப்படுத்த இந்தியா தவறியிருக்காது.
இசை நிகழ்ச்சி முழுவதும் இந்திய கொடி பறந்திருக்கும். இசை நிகழ்ச்சியில் ஆரம்பத்தை இந்தியப் பிரதமர் மோடி டில்லியிலிருந்து இணையவழியில் திறந்துவைக்கும் நிகழ்வுக்குக் கூட வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கும்.
ஆனால் இந்த இசை நிகழ்ச்சியில் இவையெதுவும் இடம்பெறவில்லை. சிறப்பு விருந்தினர்கள் கூட, நன்கு திட்டமிட்ட வகையில், அனைத்துத் தரப்பினரதும் கலவையாக இருந்தனர்.
ஆகவே இது இந்தியாவின் நிகழ்வல்ல. பொருளாதாரத்தையும், சாதியையும், உயிரெனத்தாங்கி வாழும் அரசியல் விழிப்பற்ற மக்கள் கூட்டத்தைப் பங்குபோட்டுக்கொள்ளும் வேள்வி நிகழ்வு.
பொற்கிழிகளோடு காத்திருக்கும் வியாபாரம் அறியா நுகர்வாளர்களை ஏலமெடுக்கும் நிகழ்வு. வற்றாது கிடக்கும் மொத்த வளத்தையும் சூறையாடிச்செல்வதற்கான அறிமுக நிகழ்வு.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Jera அவரால் எழுதப்பட்டு, 29 October, 2023 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.