விடுதலைப் புலிகளின் இன்மையால் இந்தியாவுக்கு ஏற்பட்ட நிலை
இந்தியாவின் பாதுகாப்பிற்கு தமிழ் மக்களே துணை நிற்பார்கள் என்பதை அந்த நாடு இதுவரை உணரவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சீனாவின் ஆய்வு கப்பலை நாட்டிற்குள் அனுமதிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் தீர்மானம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இந்த விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
சீனாவின் ஆதிக்கம்
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் சீனாவின் நடவடிக்கை மிக துரிதமாக அதிகரித்துக் கொண்டே செல்கிறது. சீனா ஆசியாவில் தனது ஆதிக்கத்தையும், பலத்தையும் நிலை நிறுத்துவதற்கான சகல முயற்சிகளையும் எடுத்து வருகிறது. அதில் ஒரு நகர்வு தான் இலங்கையை நண்பனாக்கியமை.
இலங்கையில் குறிப்பாக அம்பாந்தோட்டையில் தொடங்கி வடக்கு கிழக்கு பகுதிகளிலும் சீனாவின் ஆதிக்கம் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.
இந்தியா தற்பொழுது தமிழர்களை ஒரு எதிரியாகவும் சிங்கள மக்களை தனது நண்பனாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இலங்கையில் இருக்கின்ற சிங்கள மக்கள் இந்தியாவையும் தமிழர்களையும் எதிரியாக கருதிக் கொண்டு சீனாவை நண்பனாக கருதிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் இந்தியா சரியாக பூகோள அரசியலைப் புரிந்து, தமிழர்களை அரவணைத்து தங்களோடு இணைத்து, வடக்கு கிழக்கினூடாக தமது பாதுகாப்பை தக்கவைக்கவில்லை என்பதைத் தான் இன்றைய சூழல்கள் தெளிவுபடுத்துகின்றன.
கடந்த காலங்களில் விடுதலைப் புலிகள் இந்த மண்ணில் இருந்த பொழுது இந்தியாவிற்கு பாதுகாப்பு இருந்தது. இன்று அவர்கள் களத்தில் இல்லாமல் போனதனால் இந்தியாவுடைய பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறி இருக்கிறது.
இப்பொழுதும் கூட இந்தியா இவற்றை சிந்திக்கத் தவறினால் காலமும் வரலாறும் - சீனாவின் ஆதிக்கத்தின் மூலம் இந்தியாவை இலங்கையில் இருந்து தள்ளி வைக்கும். இதனை இந்தியா உணரும் காலம் தொலைவில் இல்லை” என்றார்.