தென் கொரியாவில் இரவோடு இரவாக பிறப்பிக்கப்பட்ட அவசரகால இராணுவ சட்டம்
தென் கொரியாவில் (South Korea) இரவோடு இரவாக அவசரகால இராணுவ சட்டத்தை அந்நாட்டின் அதிபர் யூன் சுக் யோல் (Yoon Suk Yeol) நடைமுறைப்படுத்த அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பட்ஜெட் மசோதா தொடர்பாக இன்று நாடாளுமன்றத்தில் ஒருமித்த கருத்து எட்டாத நிலையில், எதிர்க்கட்சிகள் வடகொரிய கம்யூனிச சக்திகளுடன் சேர்ந்து தேசவிரோத செயல்களில் ஈடுபடுவதாக அதிபர் யூன் சுக் யோல் குற்றம் சாட்டி அவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க அவசரகால இராணுவ சட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளார்.
தென் கொரியாவில் அடுத்த ஆண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதில் அதிபர் யூன் தலைமையிலான ஆளும் மக்கள் சக்தி கட்சிக்கும் பிரதான எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கும் ஒருமித்த கருத்து ஏற்படாததால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது.
மக்களின் வாழ்வாதாரம்
இந்தநிலையில், திடீரென அந்நாட்டு தொலைக்காட்சியில் தோன்றிய அதிபர் யூன் சுக் யோல், வட கொரியாவின் கம்யூனிஸ்ட் சக்திகளின் அச்சுறுத்தல்களில் இருந்து தென் கொரியாவைப் பாதுகாக்கவும், மக்களின் சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சியைக் கொள்ளையடிக்கும் தேச விரோத சக்திகளை அகற்றவும், நான் இதன் மூலம் அவசரகால இராணுவச் சட்டத்தை அறிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அத்தோடு, மக்களின் வாழ்வாதாரத்தைப் பொருட்படுத்தாமல், எதிர்க்கட்சிகள் தங்கள் தலைவரை குற்றச்சாட்டுகள்,விசாரணைகள் மற்றும் நீதியிலிருந்து காப்பாற்றுவதற்காக மட்டுமே ஆட்சியை முடக்கியுள்ளது என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்த திடீர் அவசரகால இராணுவ சட்டத்தால் ஏற்படும் விளைவுகள் மற்றும் இயல்பு வாழ்க்கையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்த அச்சத்தில் தென் கொரிய மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த விவகாரம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |