விடுதலைப்புலிகள் மற்றும் ஜேவிபியின் நினைவுகூரலுக்கு வேறுபாடில்லை! கஜேந்திரகுமார் எம்.பி பகிரங்கம்
யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தங்கள் உயிர்களை இழந்த தமிழர்களையும் நினைவுகூருவதும் ஜேவிபியின் நினைவுகூரல்களும் ஒரேமாதிரியானவை என நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய(04.12.2024) அமர்வின் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “யுத்தத்தின்போது உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்களையும் தங்கள் உயிர்களை இழந்த தமிழர்களையும் நினைவுகூரலுக்கும் ஜேவிபியின் நினைவுகூரலுக்கும் வித்தியாசங்கள் இருக்க முடியாது.
இரண்டு ஆயுதப்போராட்டங்கள்
இரண்டு ஆயுதப்போராட்டங்களும் அரசாங்கத்தினால் மௌனமாக்கப்பட்டன.இரண்டு ஆயுதப்போராட்டங்களும் நியாயபூர்வமானவை.
மக்கள் ஏன் ஆயுதமேந்தவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள் என்பதற்கான நியாயபூர்வமான காரணங்கள் உள்ளன.
அங்கிருந்தே நாங்கள் வருகின்றோம், ஆனால் இந்தநியாயபூர்வமான பிரச்சினைகளிற்கு தீர்வை காணாமல் ஒரு தரப்பை தடைகள் இன்றி செயற்படவும் நினைவுகூரல்களில் ஈடுபடவும் அனுமதிப்பதும்,ஏனைய தரப்பின் மீது சில கட்டுப்பாடுகளை விதிப்பதும் நியாயமான விடயம் என நான் கருதவில்லை.
நினைவேந்தல் தொடர்பான இந்த கட்டுப்பாடுகள் 2011ஆம் ஆண்டு சுற்றறிக்கையை அடிப்படையாக கொண்டவை.
உங்கள் அரசாங்கம் இனவாத அரசாங்கம் என குறிப்பிடும் அரசாங்கத்தின் காலத்திலேயே இந்த சுற்றிக்கை வெளியானது.
பயங்கரவாத தடைச்சட்டம்
அந்த அரசாங்கத்தின் காலத்தில் வெளியிடப்பட்ட நீங்கள் எப்படி நினைவுகூரல்களை முன்னெடுக்க முடியும் என தெரிவிக்கும் சுற்றுநிரூபத்தை நீங்கள் நடைமுறைப்படுத்தும்போது அது முற்றாக நியாயமற்ற விடயம்.
இந்த தவறை திருத்திக்கொள்ளவேண்டும் என நான் இந்த அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன்.
பயங்கரவாத தடைச்சட்டத்தை வடக்கில் மாத்திரமல்ல தெற்கிலும் பயன்படுத்தக்கூடாது என நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.
அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தை காவல்துறையினர் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |