யோஷித ராஜபக்சவிற்கு பிணை : வெளிநாடு செல்ல தடை
புதிய இணைப்பு
நிதி மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகனான யோஷித ராஜபக்ச பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை கொழும்பு நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்திய போதே மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
அதன்படி, சந்தேக நபரை தலா 50 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிடப்பட்டது.
வெளிநாடு செல்வதற்கு தடை
மேலும் சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு தடை விதித்த நீதிமன்றம், இது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, சந்தேகநபரை ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை காவல்துறை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறும் உத்தரவிட்ட நீதவான், சாட்சிகளுக்கு அழுத்தம் செலுத்துவதைத் தவிர்க்குமாறும் உத்தரவு பிறப்பித்தார்.
நீதிபதி தனது முடிவை அறிவிக்கும் போது, சந்தேக நபரை மேலும் விளக்கமறியலில் வைக்க போதுமான மற்றும் திருப்திகரமான ஆதாரங்களை அரச தரப்பு சமர்ப்பிக்கத் தவறியதால், பிணைச் சட்டத்தின் விதிகளின்படி பிணையில் விடுவிக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யோஷித ராஜபக்ச, சற்று முன்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
முதலாம் இணைப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) மகன் யோஷித ராஜபக்ச (Yoshitha Rajapaksa) இன்று (27) மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
நிதிமோசடி குற்றச்சாட்டின் பெயரில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே நீதிமன்றில் முன்னிலையாகவுள்ளார்.
பெலியத்த அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் வைத்து நேற்று முன்தினம் (25), குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்ட பின்னர் கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைத்து வரப்பட்டார்.
வாக்குமூலம் பதிவு
சுமார் 4 மணித்தியால வாக்குமூல பதிவின் பின்னர் கொழும்பு புதுக்கடை மேலதிக நீதவான் பவித்ரா சஞ்சீவனி (Pavithra Sanjeevani) முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
இந்தநிலையில், அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் அதன்போது உத்தரவிட்டார்.
இதேவேளை, யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டதில் ஜனாதிபதியோ அல்லது பாதுகாப்பு அமைச்சரோ எந்த தலையீட்டையும் மேற்கொள்ளவில்லை என்று காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |