காதலனுக்காக தாயின் தாலியை திருடிய மகள்! குற்றத்தை மறைத்த பின்னணி
காதலனின் பணத்தேவைக்காகத் தனது தாயின் எட்டரைப் பவுண் தாலிக்கொடியைத் திருடி அடகு வைத்ததுடன், அந்தத் திருட்டுப் பழியை வீட்டிற்கு வந்து செல்லும் உறவினர் பெண் மீது சுமத்தி அவரைச் சிறைக்கு அனுப்பிய சம்பவமொன்று மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய தனியார் வங்கிப் பெண் ஊழியர் ஒருவரை மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் இன்று திங்கட்கிழமை (23) கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து தெரியவருகையில்,
மட்டக்களப்பு தலைமையக காவல்துறை பிரிவுக்குட்பட்ட பிரதேசம் ஒன்றிலுள்ள வீடொன்றில், கடந்த ஜூன் மாதம் 28 ஆம் திகதி 8 ½ பவுண் நிறையுடைய தாலிக்கொடி திருடப்பட்டதாகப் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
காவல்துறை விசாரணை
இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பாக வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும் உறவினர் பெண் ஒருவரின் மீது சந்தேகம் இருப்பதாக வீட்டார் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர்.

அதனடிப்படையில், குறித்த உறவினர் பெண்ணைக் கைது செய்த காவல்துறை , அவரிடமிருந்து நகை எதனையும் மீட்காத போதிலும் சந்தேகத்தின் பேரில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தினர்.
இதனையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்ட அப்பெண், பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், முறைப்பாட்டாளரின் மகளான தனியார் வங்கியொன்றில் பணியாற்றும் 22 வயது யுவதியின் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பெற்று, நீதிமன்ற அனுமதியுடன் காவல்துறை வங்கிகளில் சோதனை நடத்தியுள்ளனர்.
இதில், ஜூன் 28 ஆம் திகதி திருடப்பட்ட தாலிக்கொடியை, குறித்த யுவதி தனது அடையாள அட்டையைப் பயன்படுத்தி ஜூன் 30 ஆம் திகதி தனியார் வங்கியொன்றில் 14 இலட்சம் ரூபாவிற்கு அடகு வைத்துப் பணம் பெற்றுள்ளமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து குறித்த யுவதியை இன்று (23) கைது செய்த காவல்துறை மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணைகளில், காதலனின் பணத்தேவைக்காகத் தாயின் தாலிக்கொடியைத் திருடி அடகு வைத்ததாகவும், அன்றைய தினமே மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வைத்து அப்பணத்தைக் காதலனிடம் வழங்கியதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய காதலனைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
இதேவேளை, கைது செய்யப்பட்ட யுவதி இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |