போர்க்களத்தின் முன்னணிப்பகுதிக்கு திடீரென சென்ற உக்ரைன் அரச தலைவர்(படங்கள்)
போர்முனைக்கு சென்ற ஜெலென்ஸ்கி
உக்ரைன் தலைநகர் கீவ்-வில் மட்டுமே இருந்து வந்த அரச தலைவர் ஜெலென்ஸ்கி, முதல்முறையாக தற்போதைய முதன்மை போர் முனை நகரான கார்கீவ்-விற்கு ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
உக்ரைனின் தலைநகர் கீவ்வை கைப்பற்றும் ரஷ்ய இராணுவத்தின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதை தொடர்ந்து, ரஷ்ய படைகள் பின்நகர்த்தப்பட்டு தற்போது உக்ரைனின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் அவர்களது தாக்குதல் கவனம் முடுக்கிவிப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடந்த பெப்ரவரி 24ம் திகதி உக்ரைன் மீதான ரஷ்ய போர் தொடங்கியதில் இருந்து, தலைநகர் கீவ்-விட்டு வெளியேறாமல் இருந்த உக்ரைன் அரச தலைவர் ஜெலென்ஸ்கி முதல்முறையாக தற்போதைய ரஷ்ய படைகளின் முதன்மை போர் குறியாக இருக்கும் கார்கீவ்-விற்கு நகருக்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
போர் பதக்கங்கள் வழங்கி கௌரவம்
ஜெலென்ஸ்கியின் இந்த பயணத்தின் போது, கார்கீவ் நகரை பாதுகாத்து வரும் உக்ரைன் இராணுவ படைகளுக்கு போர் பதக்கங்களை வழங்கி கௌரவப்படுத்தினார்.
அத்துடன் இராணுவ வீரர்களிடம் உரையாடிய அரச தலைவர் ஜெலென்ஸ்கி, உங்களுடைய இந்த சேவைகளுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன், நீங்கள் உங்களது உயிர்களை வாழ்க்கையை பணயம் வைத்து நமது நிலத்திற்காகவும், நமது மக்களுக்காவும் போராடுகிறீர்கள் என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, அரச தலைவரின் அலுவலகம் வெளியிட்ட வீடியோ பதிவில், ஜெலன்ஸ்கி குண்டுத் துளைக்காத பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டு, ஏவுகணைகள் மற்றும் பீரங்கி குண்டுகளால் தாக்கி அழிக்கப்பட்ட கார்கீவ் நகரின் கட்டடங்களை பார்வையிட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும் இந்த பதிவில் தெரிவித்துள்ள தகவலில், கார்கீவ் நகரில் இதுவரை 2,229 கட்டிடங்கள் சிதைக்கப்பட்டுள்ளன, அவற்றை கண்டிப்பாக மீண்டும் கட்டி எழுப்புவோம் மற்றும் அவற்றில் மீண்டும் உயிர்களை குடியேற்றுவோம் என தெரிவித்துள்ளனர்.






