கனடா சென்ற ஜெலன்ஸ்கி : உக்ரைனுக்கு வலுக்கும் ஆதரவு
ரஷ்யாவுக்கு எதிரான போரில் தமக்கு உதவிசெய்யுமாறு உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலன்ஸ்கி கனடாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில நாட்களாக இடம்பெற்ற ஐ.நா. சபை கூட்டத்தை நிறைவுசெய்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கனடா சென்றிருக்கிறார்.
நாடாளுமன்றத்தில் உரை
கனடா சென்ற அவர், அங்குள்ள நாடாளுமன்றத்தில் உரையாற்றி, இக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது. அதன்பிறகு தற்போது தான் ஜெலன்ஸ்கி முதன்முறையாக கனடா சென்றுள்ளார்.
வரவேற்பு
கனடாவின் ஒட்டாவாவில் தரையிறங்கிய ஜெலன்ஸ்கியை கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வரவேற்றார்.
பேச்சுவார்த்தையை தொடர்ந்து ஜெலன்ஸ்கி மற்றும் ட்ரூடோ டொரோண்டோ பயணம் மேற்கொண்டு அங்குள்ள உக்ரைன் மக்களை சந்திக்கின்றனர்.
இது தொடர்பாக பேசிய கனடாவுக்கான ஐ.நா. தூதர் பொப் ரே, "உக்ரைனுக்கு உதவுவதற்காக நாம் பலவற்றை செய்திருக்கிறோம், மேலும் செய்ய வேண்டியுள்ளது.
உக்ரைன் மக்களுக்காக எங்களால் முடிந்தவற்றை தொடர்ச்சியாக செய்யப் போகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.
உக்ரைனின் மொத்த மக்கள் தொகையில் நான்கு சதவீதம் பேர் தற்போது கனடாவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.