திருகோணமலையில் சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வை வலியுறுத்தி துண்டுபிரசுரம் விநியோகம்
சமஸ்டி முறையிலான அரசியல் தீர்வே அவசியம் என வலியுறுத்தும் வகையிலான துண்டுபிரசுரம் வழங்கும் செயற்திட்டம் ஒன்று திருகோணமலை (Trincomalee) நகரில் செயற்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த செயற்திட்டமானது இன்று (02) திருகோணமலை நகரில் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு கௌரவமான, உரிமைகளுடன் கூடிய நிலையான அரசியல் தீர்வு கோரி 2022 ஆம் ஆண்டு ஒகஸ்ட் 01ஆம் திகதி, சுழற்சி முறையிலான 100 நாட்கள் செயல் முனைவினை ஆரம்பித்து, 2022 நவம்பர் 08 ஆம் திகதி சமஸ்டி தீர்வுக்கான மக்கள் பிரகடனத்தை வெளியிட்டிருந்த நிலையில் அதுதொடர்பாக பொதுமக்களுக்கு தெளிவு படுத்தும் நோக்குடன் துண்டுப் பிரசுரம் பகிரப்பட்டது.
சமஸ்டி முறையிலான தீர்வு
இன்று வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களான நாம் எதிர்கொண்டு வரும் அரச இனவாத அடக்குமுறையில் இருந்து மீண்டு கௌரவமான, உரிமைகளை அனுபவிக்கும் பிரஜைகளாக வாழ வேண்டுமாயின் நிலையான அரசியல் தீர்வு அவசியம்.

ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு மீளப் பெற முடியாத சமஸ்டி முறையிலான தீர்வு ஒன்றையே நாம் திடமாக வலியுறுத்தி நிற்கிறோம்.
இலங்கையின் வடக்கு கிழக்கு பிராந்தியத்தில் எமக்கான சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய இறைமையுள்ள மக்கள் சமூகத்தினராவோம்.
எமது சுயநிர்ணய உரிமை, இறைமை என்பதை சமஸ்டி முறைமையின் மூலம் உறுதி செய்து கொள்ள திடசங்கற்பம் கொண்டுள்ளோம் என இதன்போது கருத்து வெளியிடப்பட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இணைந்து கொள்ளுங்கள்...! |